– குகா
இலங்கையில் ஆட்சிக்கு வந்த மகிந்த அரசு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆம் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அவசரம் காட்டுகின்றது.
ஆனால் அந்த முயற்சிக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதால், அந்த திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் விடயத்தில் இழுபறிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த மக்கள் ஆணை தந்ததாகக் கூறி அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக நிற்கின்றது. நாட்டின் முக்கிய பிரச்சனைகள் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை சீராக்க 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவோம் என்று அடம் பிடித்துக் கொண்டு நிற்கின்றது மகிந்த அரசு.
“நாட்டின் நன்மையை மையமாகக் கொண்டு அரசு செயல்படவில்லை. ஒரு தனிநபரை மையமாகக் கொண்டு செயற்படுகின்றது. சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளை கொண்ட 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரவே அரசு துடிக்கிறது” என்கிறார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ.
“இந்த 20 ஆவது திருத்தம் மூலம் இராணுவப் பின்னணி கொண்ட கோட்டாபய ராஜபக்ஷவின் கையில் அதிகூடிய அதிகாரங்கள் சென்றால் அது நாட்டுக்கு பாரிய நெருக்கடிகளை கொடுக்கும்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
“20ஆவது திருத்தத்துக்கு அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்பு வலுக்கிறது. இந்தத் திருத்தத்தை கொண்டு வந்தால் அரசே சிதறிப் போகும்” என்கிறார் மற்றொரு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
இராணுவ ஆட்சி:
“20 ஆவது திருத்தத்தின் மூலம் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் முடக்க அரசு அவசரம் காட்டுகிறது” என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.
உள் நாட்டுக்குள்ளேயே 20ஆவது திருத்தத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசுக்குள் இருந்தும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷேல் பச்சலேட் போர்க்கொடி தூக்கியுள்ளார்
. இலங்கை ஐநாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை 20ஆவது திருத்தம் மூலம் மீறுகிறது என்று மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரின் தொடக்க உரையில் மிஷேல் பச்சலேட் கூறியுள்ளார். இவற்றின் பின்னணியில் 20ஆவது திருத்தத்தை பொதுமக்கள் கருத்தாடலுக்கு சமர்ப்பிக்கப் போகிறோம் என்று அமைச்சரும் அரச பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல கூறுகின்றார்.
20ஆவது திருத்தத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு வலுவடைந்துள்ளதால் அதில் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சியாக விசேட குழு ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரும் பேராசிரியருமான ஜி. எல். பீரிஸ் தலைமையில் நியமித்தார்.
அந்தக் குழுவும் அவசர அவசரமாக கூடி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து பிரதமரிடம் கையளித்தது. அந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முயற்சி எடுத்த போதும் அது இறுதியில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எதிர்ப்பை சந்திக்கும் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற ஏன் அரசு அவசரம் காட்டுகிறது என்பது தான் இன்று எழும் கேள்வியாகும்.
ஜனாதிபதியே பொறுப்பு
புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக 20ஆவது திருத்தத்தை தயாரித்து சட்டமா அதிபருக்கு அனுப்பி அவரது ஒப்புதலைப் பெற்று வர்த்தமானியில் பிரசுரம் செய்தது.
வர்த்தமானியில் வந்த பின்னர் தான் அதன் உள்ளடக்கம் வெளியில் தெரிய வந்தது.அந்தத் திருத்தத்தை தயாரித்தது யார் என்பது கூட வெளியில் தெரியாமல் இரகசியமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு கூட அந்தத்திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாதா? என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றனர். இந்த 20ஆவது திருத்தத்துக்கு யார் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்கிறார் என ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டார் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எத்தகைய எதிர்ப்புகள் கிளம்பினாலும் முன் வைத்த காலை பின் வைக்க கூடாது என்ற கொள்கையில், என்ன விலை கொடுத்தாவது திருத்தத்தை நிறைவேற்ற அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது.
எப்படியாவது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து குழுநிலை விவாதத்தில் திருத்தங்களை செய்து 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் யாராவது நீதிமன்றத்திற்கு திருத்த நகலைக் கொண்டு சென்று சவாலுக்கு உட்படுத்தினால் நீதிமன்ற முடிவு வரும் வரை நாடாளுமன்றத்தில் திருத்தத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்.
எதுவாக இருந்தாலும் 20ஆவது சட்டத்திருத்தம் நிறைவேறும் விடயம் இழுபறியில் தான் தொடரப் போகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.