January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மார்ச்சில் வெளியாகும் “காடன்” திரைப்படம்

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நடிகர் தனுஷ் ,கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்திற்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் “ஹாத்தி மேரே சாத்தி”.

இது ஹிந்தி, தமிழ் ,தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்படுகிறதுடன் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ‘காடன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஸ்ரேயா பில்கோன்கர், ஸோயா ஹூசைன்,ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில் சாண்டோ சின்னப்பா தேவர் ஹிந்தியில் தயாரித்த படம் தான் ஹாத்தி மேரா சாத்தி. இந்தப் படம் பின்னர் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா நடிப்பில் “நல்ல நேரம்” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்தப் படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்ட இயக்குனர் பிரபு சாலமன், இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காடுகளிலும், தாய்லாந்தில் உள்ள பசுமைக் காடுகளிலும் பெரும் பொருட்செலவில் “காடன்” படமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராணா ,விஷ்னு விஷால் ஆகியோர் சிறப்பு பயிற்சிகள் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பிரபுசாலமன் யானையை வைத்து எடுத்த கும்கி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் காடன் திரைப்படமும் யானையை வைத்தே படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ‘கும்கி’ கொடுத்த மலைவாழ் மக்களின் யாதார்த்த வாழ்வியலை மீண்டும் உணர்வுபூர்வமாக கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.