உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சீனாவில் ஆய்வு செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கொவிட்- 19 வைரஸ் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு இம்மாத தொடக்கத்தில் சீனா செல்வதாக இருந்தது. இருப்பினும், இக்குழு சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும், சீனாவிற்கு சர்வதேச குழுக்களை அனுப்புவது முன்னுரிமைக்குரிய விடயம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், வூகானிற்கு செல்வதற்காக ஐக்கிய நாடுகளை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் தங்கள் நாடுகளில் இருந்து புறப்பட்டுள்ளதோடு, சீன அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எங்கள் நிபுணர் குழுவுக்குத் தேவையான அனுமதியைச் சீனா இன்னும் வழங்கவில்லை. இது குறித்து நான் சீனாவில் இருக்கும் சில உயர் அதிகாரிகளுடன் பேசினேன். அவர்களிடம், இந்த ஆய்வுப் பணிகள் உலக சுகாதார அமைப்பிற்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்தினேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு உருவாக்கியதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், அவற்றை சீனா முழுமையாக மறுத்துள்ளது.
வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள எப்போதும் சர்வதேச ஆய்வாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சீனா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.