January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர சபை விவகாரத்தில் நடந்தது என்ன?: சிறப்புக் கட்டுரை

-யோகி

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி கோரியது முதல், பின்னர் தமிழீழம், இன்று மாகாண சபை அதிகாரங்களை கோரி நிற்பது வரை ஆட்சியாளர்களுடனான மோதல்கள் இன்னும் முடியவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க, தற்போது மாநகரசபை ஒன்றின் ஆட்சியுரிமைக்காக தமிழ்த் தரப்புக்குள்ளேயே முட்டிமோதுகின்ற அளவிற்கு ‘தமிழ்த் தேசிய கோட்பாட்டு’ அரசியல் சுருங்கிவிட்டதா என்ற கேள்வி எழுகின்றது.

2020 ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்த இறுதி வாரத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும்  யாழ்ப்பாணக் குடாநாடு கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது.

ஒருபுறத்தில் யாழ்.மருதனார் மடம் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணிப் பரவல், மறுபுறத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட சலசலப்புக்கள் தான் அதற்கு காரணம்.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த ஆட்சி

2002 ஜனவரி 15 இல் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக பதவி ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செல்லன் கந்தையன் 2003ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி அப்பதவியிலிருந்து நீங்கியிருந்தார்.

அதன்பின்னர் சுமார் 15 ஆண்டுகள் ‘தமிழ்த் தேசியக் கோட்பாட்டு’ அரசியல் தரப்புக்களின் கைகளில் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பது வேறு விடயம்.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் கிடைத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவல் ஆர்னோல்ட்டும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி மணிவண்ணனும் மேயர் பதவிக்கு களமிறங்கினர்.

முத்தரப்பு மோதல் ஏற்பட்டதால், இறுதியில் ஆர்னோல்ட் மேயராக பதவி ஏற்றார். இவர் மேயராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்களில் முக்கியமானவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

அன்று பலரது தெரிவு முன்னாள் பாராளுமன்ற உறப்பினரான சொலமன் சிறிலாக இருக்கையில் அத்தனை எதிர்ப்புக்களையும், சவால்களையும் கடந்து ஆர்னோல்ட்டை மேயர் வேட்பாளராக்கியவர் சுமந்திரன்.

ஆர்னோல்டை பதவியில் அமர்த்துவதில் சிக்கல்கள் எழுந்ததும், பலமுனைகளிலும் காய்களை நகர்த்தி ஒருவாறு தனது ‘விசுவாசியான’ ஆர்னோல்ட்டை மேயர் ஆசனத்தில் அமரவைத்தார் சுமந்திரன் என்ற பேச்சுக்களும் அப்போது பரவலாக அடிபட்டன.

பல நெருக்கடிகள் இருந்தும், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை கூட்டமைப்பு வசமாக்கினார் சுமந்திரன் என்பதே அன்றைய பேசுபொருளாக இருந்தது.

இத்தனைக்கும் நடுவில் பதவியில் அமர்ந்த ஆர்னோல்டால் வெறுமனே இரண்டு ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கின்றது.

பல்வேறு விமர்சனங்களுடன் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தப்பி பிழைத்தார் ஆர்னோல்ட். வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற அவரால் ‘இயலாது’ என்பது முற்கூட்டியே உணரப்பட்டிருந்தது.

இருந்தும், தமிழ்த் தேசிய முன்னணிக்குள் பூதாகரமாகியிருந்த ‘பிளவு’ பெரும்பாலும் இம்முறை கைகொடுக்கும் என்றொரு அரசியல் கணக்கு கூட்டமைப்பிடம் இருந்தது.

வரவுசெலவுத் திட்டம் தோல்வி

2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் முறையே 10, 16ஆம் திகதிகளில் ஆர்னோல்ட் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டபோது தோல்வியடைந்தது.

மூன்றாவது தடவையும் அவர் தலைமையில் வரவுசெலவுத் திட்டம் தோல்வி அடைந்தால் மாநகரசபையின் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளரின் கைகளுக்குச் சென்றுவிடும் ஆபத்து நிறைந்திருந்தது.

புதிய மேயருக்கான வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலைமை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டது. டிசம்பர் 30ஆம் திகதிக்குள் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமும் எழுந்தது.

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 16 ஆசனங்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் 13 ஆசனங்களும், ஈழக்கள் ஜனநாயகக் கட்சியிடம் 10 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சியிடம் 3 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் ஒரு ஆசனமும் உள்ளன.

இதில் யார்-யாருடன் கூட்டுவைப்பது, யாரை மேயராக்குவது என்பதில் அரசியல் கட்சிகளுக்குள் காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ‘மேயர் கோதாவில்’ இறங்குவதில்லை என்று முடிவெடுத்தது.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலோ தான் ஒருவர் மேயராக வேண்டும் என்ற நியதி ஏற்பட்டிருந்தது. ஆனால் மேயர் வேட்பாளராக ஒருவரை நிறுத்தவதற்கான ‘வலிமை’ முன்னணியிடமும் இருந்திருக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் தேசிய அமைப்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிளவுபட்டு ‘மணி அணியாக’ உருவெடுத்தமை இதற்கு முக்கிய காரணம்.

ஆக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நிறுத்தப்படும் மேயர் வேட்பாளருக்கே வெற்றி நிச்சயம் என்ற நிலைப்பாடு வலுத்திருந்தது.

ஆனால் அந்த வேட்பாளருக்கு பொருத்தமானவர் யார் என்பதில் கூட்டமைக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள்ளேயே மல்லுக்கட்டும் படலம் ஆரம்பமானது.

மாவையின் கணிப்பு

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும் இரண்டு அணிகள் இழுபறியில் உள்ளமை வெளிச்சத்துக்கு வந்தது; ஒன்று சுமந்திரன் தலைமையில் சிறிதரன் உள்ளிட்டவர்களின் அணி.

மற்றையது, மாவை சேனாதிராஜா தலைமையில் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் உள்ள அணி. இதனால் இந்த இரு அணிகளில் யாருக்கு ஆதரவானவரை களமிறக்குவது என்பதில் போட்டாபோட்டிகள் நிலவின.

இரவுபகல் பாராது பேச்சுக்கள் தொடர்ந்தன. கட்சி அலுவலகங்களைத் தாண்டி சில உறுப்பினர்களின் வீடுகளுக்குள்ளும் ‘இரகசியக் கூட்டங்கள்’ நடைபெற்றன.

சுமந்திரனின் ‘விசுவாசியாக’ பொதுவெளியில் அறியப்பட்ட ஆர்னோல்ட் பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு எதிராக செயற்பட்டமையால் அவரை மீண்டும் மேயர் வேட்பாளராகிவிடக் கூடாது என்பதில் சுமந்திரன் உறுதியாக இருந்ததாக சொல்லப்பட்டது.

2018 இல் பலர் ஆதரவுடன் முன்மொழிப்பட்ட சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் இம்முறை சுமந்திரன் உறுதியாக இருந்தார். அதற்கான முனைப்புக்களையும் தீவிரமாக முன்னெடுத்தார்.

கஜேந்திரகுமார் பகிரங்க ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி ‘ஆர்னோல்ட் மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தமது அணி எதிர்க்கும்’ என்று கூறியது சுமந்திரன் ஆதரவு நிலைப்பாடாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், ஆர்னோல்டை மேயர் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்வதன் மூலம் சுமந்திரனுக்கும் அவர் சார்பு அணியிருக்கும் ஒரு பாடம் புகட்டிவிடலாம் என்று எண்ணினார் மாவை.சேனாதிராஜா. பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட்டின் இணக்கப்பாட்டை முதலில் பெற்றார்.

அதன் பின்னர், மாநகரசபையின் உறுப்பினர்களின் கூட்டத்தினைக் கூட்டினார். ஆர்னோல்டே மூன்றாவது தடவையாகவும் வேட்பாளராக களமிறக்கப்படப் போவதாக கூறினார் மாவை.

மாநகர சபையின் சில உறுப்பினர்கள் மேயர் வேட்பாளராக ஆர்னோல்ட்டை நிறுத்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். மாவை எதற்கும் மசியவில்லை.

டிசம்பர் 30ஆம் திகதி மாநகர சபையின் தீர்க்கமான அமர்வுக்கு முந்தைய நாள் மாலையில் ‘கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக மீண்டும் ஆர்னோல்ட் களமிறங்குவார்’ என்று அறிவித்தார் மாவை.

மாவை, மூன்றாவது தடவையாகவும் ஆர்னோல்டை அறிவித்தமைக்கு, வெறுமனே சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு மட்டும் காரணமல்ல. ஆர்னோல்ட் மீண்டும் வெல்வார் என்று அவர் சில உறுதிப்படுத்தல்களையும் செய்திருந்தார்.

முதலாவது கஜேந்திரகுமார் தரப்பிலோ, டக்ளஸ் தரப்பிலோ வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்பது தமக்கு பலம் என்று கருதியிருந்தார் மாவை.

இரண்டாவது. கஜேந்திரகுமாரின் ஆர்னோல்ட் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிராக மணிவண்ணன் செயற்படுவார் என்ற எண்ணப்பாட்டினை மாவை கொண்டிருந்தார். அவரை தொலைபேசி ஊடாக அழைத்துப் பேசினார். இதன்போது மணியின் மறுதலிக்காத பதில் மாவைக்கு முழு நம்பிக்கை அளித்தது.

மூன்றாவது, ஈபிடிபி தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் தான் நிறுத்திய வேட்பாளர் ஆர்னோல்ட் வெற்றி பெறுவார் என்று நிறுவிக் கொண்டார் மாவை.

ஆனால், திடீரென 29ஆம் திகதி இரவு 8.30மணிக்கு, மணிவண்ணன் அணியில் உள்ளவரும் அவருடைய சகாவுமான, வரதராஜன் பார்த்தீபன் ‘மாநகர சபை நிர்வாகம் ஆணையாளரிடத்தில் செல்லாது தடுக்க வேண்டும். ஏதோவொரு வகையில் அதன் ஆட்சியை நாம் அமைத்தால் எமது மக்கள் விமர்சனம் செய்வார்கள். அதற்காக அஞ்சிக்கொண்டிருக்க முடியாது. விமர்சன அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதைக் காட்டிலும் முயன்று பார்த்து தோற்றுப்போதல் சிறப்பானது’ என்று சாரப்பட்ட முகநூல் பதிவொன்றை இட்டார்.

சொற்ப நேரத்திலேயே மணிவண்ணன் மேயர் வேட்பாளராக களமிறங்குகின்றேன் என்று அறிவித்தார். எப்படி நீங்கள் வெற்றி பெறப்போகின்றீர்கள்? யாருடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள்? கட்சித் தலைமையின் அனுமதியைப் பெற்றீர்களா? என்றெல்லாம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

அதற்கு மணிவண்ணன் ‘கட்சி இந்த விடயத்தில் என்னை அழைத்துப் பேசவில்லை. ஆர்னோல்ட்டை நிறுத்தினால் எதிர்த்து வாக்களிப்பதாக அறிவித்துள்ளது. அவ்வாறு ஆர்னோல்ட்டுக்கு எதிராகச் செல்லும் வாக்குகள் வெறுமையாவதை விட அதனைப் பெற நான் முயற்சிக்கின்றேன்.

வெற்றி பெற முடியுமா என்று தெரியாது. நாங்கள் இதுபற்றி யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை’ என்று கூறிவிட்டார்.

நள்ளிரவைத் தாண்டி பல வியூகப் பேச்சுக்கள் தொடர்ந்தன. பொழுது புலர்ந்தது, அமர்வு தொடங்கியது.

மேயரானார் மணிவண்ணன்

ஆர்னோல்ட்டும் மணிவண்ணனும் களம் கண்டனர். வாக்கெடுப்பு ஆரம்பமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் ஆர்னோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் சட்டத்தரணி வி. மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கவில்லை. மணிவண்ணன் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயரானார்.

சொற்ப நேரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், மணிவண்ணனும் அவரது அணியினரும் ‘கொள்கைக்கு துரோகமிழைத்து டக்களஸை கட்டியணைத்து தோழர்கள் ஆகிவிட்டனர்.

இது நடக்கும் என்று முன்பே அறிந்து தான் நாம் கட்சியிலிருந்து அவரை நிறுத்தினோம்’ என்று தடாலடியாகக் கூறிவிட்டார்.

டக்ளஸோ, ‘வேட்பாளராக நின்ற இருவரில் மணிவண்ணன் இளைஞர், புதியவர், ஒரு வாய்ப்பை வழங்குவோம் என்று அவரை ஆதரித்தோம்.

ஆணையாளரிடம் அதிகாரம் செல்வதை விட எஞ்சிய ஒருவருடத்தினை புதியதொரு இளைஞரிடத்தில் கையளிப்பது தவறல்லவே’ என்று கூறிவிட்டார்.

அன்றைய நாளிலேயே சுமந்திரனும் மாவை சேனாதிராஜாவுக்கு நீண்ட கடிதமொன்றை விரைந்து அனுப்பினார். ‘யாழ்ப்பாண மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் பறிபோனமைக்கான முழுப்பொறுப்பையும் மாவையே ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற தேர்தல் பின்டைவுகளுக்கு கட்சித் தலைவர் மாவையும், செயலாளர் துரை ரட்ணசிங்கமும் தான் காரணம் என்று பொதுவெளியில் குற்றம் சாட்டிய பாணியிலேயே இம்முறையும் சுமந்திரன் இந்த பகிரங்கக் கடிதம் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மாவை தனது முயற்சி தோல்வி கண்டு விட்டதே என்று மீள்வதற்குள் கட்சிக்குள்ளிருந்து இப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் வந்துள்ளது. கடந்த தடவை மாவைக்கு எதிராக சுமந்திரன் பேசியபோது, அவருக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த பலர் இப்போது மாவையுடன் இல்லை.

கடந்த தடவை சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது வரையில் நிலைமைகள் சென்றுகொண்டிருந்போது, சுமந்திரனின் ‘தேர்தல் வெற்றி’ இராப்போசன நிகழ்வுக்கு சென்றதன் மூலம், மாவை  தன் ஆதரவாளர்களை இழந்துவிட்டதாகவும், இப்போது மாவையே நடவடிக்கை எடுக்க முனைந்தாலும் அதனை ஆதரிப்பதற்கு ஆட்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

சரி, இத்தனைக்கும் அப்பால், மணிவண்ணன் மேயராகிவிட்டார். அவருக்கு இருப்பது வெறுமனே ஒருவருட காலம் தான். அதற்குள் அவரால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி  அவர் முன்னிருக்கின்றன.

முதலாவதாக அவர் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அவருடன் இளம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் புதிய சிந்தனையில் யாழ்.நகரம் மிளிருமா என்ற எதிர்பார்ப்புக்கள் இப்போது வலுத்திருக்கின்றன.

யாருக்கு வெற்றி

மறுபுறம், வெற்றி பெற்றது மணிவண்ணன் மட்டுமல்ல. டக்ளஸும் சுமந்திரனும் கூடத் தான் என்கின்றனர் களத்தை உன்னிப்பாக அவதானித்தவர்கள்.

டக்ளஸைப் பொறுத்தவரையில் மணியை மேயராக்கியதன் மூலம்,

  • தனக்கு துரோகிப் பட்டம் அளிக்கும் கஜேந்திரகுமார் அணி உறுதியாக பிளவுபடுத்தப்பட்டு விட்டது
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து மாநகரசபையின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது
  • தமிழரசுக் கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன.
  • மாநகர ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கு வாய்ப்பொன்று ஏற்பட்டுள்ளது. அது அடுத்த தேர்தலுக்கு கைகொடுக்கும்.
  • தனக்கு எதிரான எதிர்மறை-பிம்பத்தை களைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுமந்திரனைப் பொறுத்தவரையில் மணி மேயராகியதன் மூலம்,

  • கஜேந்திரகுமாரிடத்திலிருந்து மணிவண்ணன் மற்றும் அவரது குழுவினர் நிரந்தரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • தான் முன்னர் ஆதரித்து, இம்முறை எதிர்த்த ஆர்னோல்ட்டின் பதவி பறிபோனதன் மூலம் ஏனையவர்களுக்கும் தனது மொழியில் செய்தியொன்று சொல்லப்பட்டுள்ளது.
  • தனக்கு ‘செக்’ வைக்க திட்டம் தீட்டும் மாவை உள்ளிட்ட அணியிருக்கு மீண்டும் பதிலடி வழங்கி, மாவையின் தலைமைத்துவம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
  • அடுத்து, டக்ளஸின் ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்தமையால் மணிவண்ணனுக்கான ‘மிடுக்கான இளம் தமிழ்த் தேசியவாதி’ என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.

இப்படி, யாழ் மாநகரசபை விவகாரத்தில் ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிக்கப்பட்டுள்ளன.

வெறும் 1910 ஹெக்டேயர் பரப்பை ஆளுகின்ற ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்கே தமிழர் தரப்பு தமக்குள் முட்டி மோதும் நிலை உள்ளபோது, அடுத்து மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வுத் திட்டம் என்று வரும்போது அவற்றை அரசியல் தலைவர்கள் மக்கள் நலன்சார்ந்து அரசியல் முதிர்ச்சியுடன் கையாள்வார்களா என்பது கேள்விக்குறி தான்.