January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளியின் விலைகள் புதிய ஆண்டில் மேலும் அதிகரிக்குமா? சிறப்பு வணிகக் கட்டுரை

-ரகுராஜ் தர்மரட்ணம் (ACMA, CGMA)

அறிமுகம்

கடந்த 17 வருடகால வரலாற்றில், டிசம்பர் மாதக் கடைசியில் வெள்ளியை (silver) கொள்வனவு செய்து அதனை பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரையில் வைத்திருந்தால் 14 முறை, அதாவது 80 வீதத்திற்கும் அதிகமான தடவைகள், விலை அதிகரிப்பு ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் 31 வரை மிக அதிகளவில் கொள்வனவு செய்யப்பட்ட தங்கம் 26 வீதத்தால் விலை உயர்வு அடைந்திருக்கும் வேளையில், வெள்ளியின் விலையானது  50 வீதத்தால் அதிகரித்ததை இங்கு குறிப்பிடவேண்டும்.

உலக நாடுகளில் கொவிட்-19 பாதிப்பினால் கடன் அளவுகள் அதிகரிக்கும் பொழுது பாதுகாப்பான முதலீடு (“Safe haven” ) என கருதப்படும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படும்.

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் பொழுது அது வெள்ளியின் விலையிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும்.

வெள்ளி விலை அதிகரிப்புக்கான பொருளாதார அடிப்படையிலான காரணிகள் 

  • வெள்ளி விலைகள் அமெரிக்க டொலரில் கணிக்கப்படுகின்றன. எனவே அமெரிக்க டொலரின் வீழ்ச்சி என்பது வெள்ளியின் விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
  • புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுற்றுச் சூழலுக்கு சாதகமான மின்சக்தி (Green Energy) உருவாக்கத்தை ஆதரிப்பவர்; அதனால், அடுத்த 5 ஆண்டுகளில் 500 மில்லியன் சூரிய சக்தி மின்னுற்பத்தித் தகடுகளை (solar panels) நிறுவ திட்டமிட்டுள்ளார்.
  • சூரிய சக்தி மின்னுற்பத்தியில் வெள்ளியின் பங்கு முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை அதன் விலையை மேலும் அதிகரிக்கும்.

வெள்ளியின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான நுட்ப ரீதியான காரணிகள் 

பெரிய வங்கிகள் மற்றும் ஹெட்ஜ் நிதி (hedge funds)  நிறுவனங்கள் வரைபடங்களை (Graphs) ஆராய்வதன் மூலம் விலைகள் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதைக் கணிக்கின்றன.

இங்கு காட்டப்பட்டு இருக்கும் 9 மாத வரைபடத்தை பார்க்கும் போது செங்குத்தாக உள்ள சிவப்பு கோடு ஒவ்வொரு நாளில் ஏற்படும் விலை குறைவுகளையும் பச்சை நிறம் விலை அதிகரிப்பையும் தெரியப்படுகின்றது.

இரண்டு நீல நிறக்கோடுகள் சமச்சீர் முக்கோண வடிவத்தை (Symmetrical triangle pattern) உடையவை. விலைகள் நீலக் கோட்டிற்கு மேலே செல்லும் பொழுது விலைகளில் மேலும் அதிகளவு உயர்வு ஏற்படமுடியும்.

தற்போது இருக்கும் $26 என்ற விலையில் இருந்து $35 வரை விலைகள் உயர்ந்து செல்லும் என கணிக்கப்படுகின்றது.

நீண்ட கால விலை உயர்வு; எவ்வளவு வரை உயரலாம்?

எதிர்கால விலை உயர்வுகளை எவராலும் உறுதியாகக் கணிக்க முடியாவிட்டாலும் இங்கு இருக்கும் 10 வருட வரலாற்று வரைபடம் மூலம் இதனைக் கணிக்கலாம்.

இங்கு இருக்கும் செங்குத்தான ஒவ்வொரு பச்சை மற்றும் சிவப்பு கோடுகள் ஒரு மாத விலை மாற்றங்களை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு முன்னைய அதிகூடிய விலை என்பது ஏப்ரல் 2011 ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் $ 50 என இருந்தது.

எனவே தற்போது உள்ள விலையான $26 இலிருந்து $35 ஆக அதிகரித்து பின்னர் $35ற்கு மேலே சென்றால் அடுத்த கட்டம் அது $ 50 ஐ அடைய முடியும். கடந்த ஆண்டு. கொவிட்-19 என்ற பாதிப்பு இருந்த போதிலும் எவரும் எதிர்பாராத விதமாக பிட்கொய்ன் விலையில் 4 மடங்கு அதிகரிப்பையும் Tesla  கம்பனி விலையில் 9 மடங்கு விலை அதிகரிப்பையும் நாம் பார்த்திருந்தோம்.

முடிவுரை

வெள்ளியின் விலையில் இந்த ஆண்டு 50 வீத அதிகரிப்பு ஏற்பட்டாலும், ஏப்ரல் 2011 இல் அதிகப்பட்ச விலையான $50 உடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதன் விலையானது இன்னும் 48 வீதம் குறைவாகவே உள்ளது.

தங்கத்தின் அதிகபட்ச விலையான $1900 என்பது ஜுலை 20 இல் முறியடிக்கப்பட்டது. ஆனால் வெள்ளியின் அதிகபட்ச விலையான $50 என்பது இன்னும் முறியடிக்கப்படவில்லை.

எனவே இந்த ஆண்டு வெள்ளியின் விலையானது தற்போது இருக்கும் $26 இலிருந்து $50 ஆக உயர்ந்து செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவே தென்படுகின்றன.

2010/ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விலையானது $ 26 இலிருந்து $50 ஆக 6 மாத காலத்திலேயே அதிகரித்ததால் இம்முறையும் இந்த விலை அதிகரிப்பு மிகவும் விரைவாகவே அதிகரிக்கலாம்.

 
***கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். அவை ‘தமிழ் அவனியின்’ கருத்துக்கள் அல்ல***

கட்டுரையாளர்: ஐக்கிய இராச்சியத்தை (UK) தளமாகக் கொண்டியங்கும் பிரசித்திபெற்ற சர்வதேச வணிக நிறுவனம் ஒன்றின் நிதித்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றும் ரகு தர்மரட்ணம், Investors Chronicle மற்றும் AsianVoice உள்ளிட்ட இதழ்களுக்கு நிதிச் சந்தை தொடர்பான ஆய்வு-ஆக்கங்களை எழுதிவருகின்றார். விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக (Special Needs Children) இயங்கும் முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராகவும் பொருளாளராகவும் அறங்காவலராகவும் ரகு தர்மரட்ணம் விளங்குகிறார்.

குறித்த தொண்டு நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் நன்கொடைகள் மூலமாகவும் பிரித்தானியாவின் Big Lottery Fund மற்றும் BBC Children in Need உள்ளிட்ட தொண்டு நிதியங்கள் ஊடாகவும் சுமார் £600,000 ($802,0000) க்கும் அதிக நிதியை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் அவனி நேயர்களுக்காகவும் அவரது சிறப்புக் கட்டுரைகள் இனி இங்கே தொடர்ந்து வெளியாகவுள்ளன.
தொடர்பு: draguraj@googlemail.com