January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடராஜர் தத்துவத்தை உணர்த்தும் ஆருத்ரா தரிசனம்

படம்: ஸ்ரீநடராஜர் கோயில், சிதம்பரம்

ஆருத்ரா என்பது தமிழில் ஆதிரையை குறிக்கும். ஆதிரை நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்ற அடைமொழி கொடுத்து சிறப்பிக்கப்படுகிறது.

ஆதிரையின் முதல்வன் சிவபெருமான் ஆதிரையான் என்றும் அழைக்கப்படுகின்றார். மார்கழி திருவாதிரையில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பான பூசைகள் நடைபெறும்.

சில கடவுள்களுக்கும் நட்சத்திரம் இருப்பதாகக் கூறுவார்கள். ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், முருகனுக்கு விசாகம், ஆஞ்சநேயருக்கு மூலம். இவர்கள் பூமியில் அவதரித்த நட்சத்திரங்களாகும்.

பிறப்பே இல்லாத சிவனுக்கு எப்படி திருவாதிரை நட்சத்திரத்தை குறிப்பிட்டு கூறுகிறார்கள் என்று சிந்தித்தால் அதற்கும் காரணம் உண்டு.

‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று சிலப்பதிகாரம் சிவபெருமானை குறிக்கின்றது. சிவபெருமான் தீப்பிழம்பாக தோன்றி தன்னை வெளிப்படுத்தியது சிவராத்திரி நாளாகும்.

சிவபெருமான் இப்பூமியில் தோன்றியது ஆருத்ரா நாளில். ஆருத்திரா நாளில் அவரைத் தரிசித்தால் பலன் உண்டு.

பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் நடனத்தைக் கண்டு மகிழ சிதம்பரத்தில் தவமிருந்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக்காட்டிய நாள் தான் மார்கழி திருவாதிரை. ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்வார்கள்.

இறைவன் சேந்தனாரிடம் களி வாங்கி உண்டதும் இந்த நாளில் தான். இதனால்தான் இந்நாளில் களியை நைவேத்தியமாக நடராஜப் பெருமானுக்கு படைக்கிறார்கள்.

பஞ்ச கிருத்தியங்கள் என்று சொல்லப்படுகின்ற ஐந்தொழில்களையும் உணர்த்துகின்ற வடிவம் நடராஜர் திருவுருவம் ஆகும்.

நடராஜ வடிவத்தின் ஐந்தொழில்களும் அதற்குரிய கருவிகளும்:

  1. படைத்தல் – வலதுபுற மேல் கரம் (உடுக்கை)
  2. காத்தல் – வலதுபுற கீழ் கரம் (அபயகரம்)
  3. அழித்தல் – இடதுபுற மேல் கரம் (தீ)
  4. மறைத்தல் – மிதித்த திருவடி
  5. அருளல்  – தூக்கிய திருவடி

இவ்விதம் உலக இயக்கத்திற்கான தொழில்களை நடராஜர் புரிகின்றார்.

நடராஜர் அபிஷேகம்

சிவபெருமானாக வீற்றிருக்கும் லிங்கத்திற்கு எல்லா நாட்களிலும் அபிஷேகம் செய்யலாம். ஆனால் நடராஜருக்கு வருடத்தில் 6 முறைதான் அபிஷேகம் செய்யப்படுகின்றது.

அவையாவன:

  • சித்திரை திருவோணம்
  • ஆனி உத்தரம்
  • ஆவணி வளர்பிறை சதுர்த்தசி திதி
  • புரட்டாதி வளர்பிறை சதுர்த்தசி
  • மார்கழி திருவாதிரை
  • மாசி வளர்பிறை சதுர்த்தசி

ஆகிய நாட்களில் மட்டும் தான் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

தேவர்களுக்கு உரிய நாளில் வைகரைக்கு சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி, உச்சி காலத்திற்கு சமமானது சித்திரை, மாலைக் காலத்திற்கு சமமானது ஆனி, இரவுக்கு சமமானது ஆவணி, அர்த்த சாமத்திற்கு சமமானது புரட்டாதி.

ஆனி உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித் திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.

சிவன் ஆடிய தாண்டவங்கள் 108. அதில் ஏழு தாண்டவங்கள் முக்கியமானவை; காளி தாண்டவம், கௌரி தாண்டவம், சந்தியா தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம்.

இதில் ஆனந்த தாண்டவம் ஐந்தொழில்களையும் குறித்த நிற்பதாகும். இது பிரபஞ்சத்தின் இயக்க நடனம் என்றும் கூறப்படுகிறது.

புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து வலக்கையால் டமருகதத்தை அடித்தும் இடக்கையில் அக்னி ஏந்தியும் ஒருகையால் அபயம் அளித்தும் மறுகையால் பாதத்தைக் காட்டியும் முயலகனை காலால் மிதித்தும் இடக் காலைத் தூக்கியும் நடராஜர் ஆடினார்.

நடராஜரின் நடனத்தை தரிசிக்கும்போது சிவகாமியையும் நினைத்து தரிசிப்பார்கள். சிதம்பரத்தில் திருவாதிரை திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இம்முறை டிசம்பர் 29 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் இன்று 30 ஆம் திகதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

30 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மார்கழி திருமஞ்சனம் நடைபெறும். காலை 10 மணிக்கு இராஜ சபையில் பக்தர்களுக்கு நடராஜர் காட்சி அளிப்பார்.

பின்னர் இராஜ சபையில் இருந்து சிற்சபை அன்னை சிவகாமி சமேத அருள்மிகு நடராஜப் பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனக் காட்சி இடம்பெறும்.

அந்த அருள் நிறைந்த காட்சியை கண் குளிர பக்தர்கள் தரிசிப்பார்கள். ஆடல் வல்லானின் அருள் அனைவருக்கும் கிடைத்து எல்லோரும் நோய் பிணி நீங்கி நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவானாக!

-தமிழ்வாணி (பிரான்ஸ்)