January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (27.12. 2020 – 02.01. 2021)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)

இதுவரை உங்கள் இராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 10 ஆம் இடமான மகர இராசியில் சஞ்சரிக்கின்றார்.

அது உங்களுக்கு தொழில் ஸ்தானமாகும். மகர இராசிக்கு அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான்.

தொழில் நடத்துபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்த எதிர்பாராதவிதத்தில் பணம் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பளம் போதாமை காரணமாக வேறு தொழிலை தொடங்குவதற்கான விருப்பம் ஏற்படும்.(கார்த்திகை 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம் ரோகினி)

உங்கள் இராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 9 ஆம் இடத்துக்குச் செல்கின்றார்.

அஷ்டமத்து சனியிலிருந்து விடுபடுகின்றார். எனவே, தடைகள் அகலும். தனவரவு உண்டு. மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா செய்வீர்கள். பாக்கியஸ்தானம் பலம்பெறும்.

பெற்றோர் வழி உறவினர்களிடமிருந்த விரிசல்கள் அகலும். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக்கண்டு ஆச்சரியப்படுவர்.

உயர்ந்த மனிதர்களுடனான பழக்க வழக்கத்தால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள் அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு காலம் கைக்கூடலாம். பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நல்லதுதான்.(மிருகசீரிடம் 3 ஆம்,4 ஆம் பாதம், திருவாதிரை, புனர் பூசம் 1 ஆம், 2 ஆம்,3 ஆம் பாதம்)

இதுவரை உங்கள் இராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 8 ஆம் இடத்துக்கு அஷ்டமத்து சனியாக சஞ்சாரம் செய்கின்றார்.

அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. சற்று அவதானமாக இருப்பது நல்லது. மற்ற இராசிகளை காட்டிலும் உங்கள் இராசிக்கு அஷ்டமத்து சனி அவ்வளவு கெடுபலன்களை கொடுக்காது.

காரணம் அஷ்டம அதிபதியாக சனி விளங்குகின்றார். எனவே, தனது சொந்த வீட்டில் சனி சஞ்சரிக்கும்போது கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும்.

எதையும் ஒருதடவைக்கு பலமுறை யோசித்து செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இடமாற்றம் , ஊர்மாற்றம் , வீடுமாற்றம் ஒருசிலருக்கு வரலாம்.(புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

இதுவரை உங்கள் இராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் சப்தமஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கின்றார்.

கண்டகச்சனியின் ஆதிக்கம் இருந்தாலும் நீங்கள் கவலைப்படவேண்டாம். காரணம் மகரத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்குள்ள குருபகவானோடு இணைகின்றார்.

குரு பார்த்தாலும் தோஷநிவர்த்தி குரு இணைந்தாலும் தோஷ நிவர்த்தி என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.

இல்லத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.


(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

உங்கள் இராசிக்கு 6 , 7 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான் அவர் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் தனது சொந்த வீடான மகர இராசியில் சஞ்சரிக்கின்றார்.

6க்கு அதிபதி 6 இல் வரும்போது பெரியளவில் பாதிப்புகள் இருக்காது. ஜீவணஸ்தானம் பலப்படுவதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

புதிய ஒப்பந்தகொடுங்கள் வந்துசேரும். தொழில் தடையின்றி சீராக நடைபெறும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.

கொடுக்கல் – வாங்கல் பிரச்சினைகள் அகலும். வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்து கொடுக்கும் விதத்தில் சனியின் சஞ்சாரம் அமைகின்றது.(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)

இதுவரை உங்கள் இராசிக்கு 4 ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்துவந்த சனிபகவான் பல விதத்திலும் தொல்லை தந்தவர் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் மகர இராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

அவர் உங்கள் இராசிக்கு 5 ஆம் இடமான மகர இராசிக்கு வருகின்றார். பஞ்சமஸ்தானாதிபதியான சனி பஞ்சமஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கும்போது தொட்டது துலங்கும்.

உற்றார் உறவினர்கள் மாத்திரமன்றி நண்பர்களும் போட்டிபோட்டுகொண்டு உதவ முன்வருவார்கள். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஏற்படலாம்.

உத்தியோகத்தர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும்.

(சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

இதுவரை உங்கள் இராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் 4 ஆம் இடத்துக்கு அஷ்டமத்து சனியாக சஞ்சாரம் செய்கின்றார்.

ஆதிக்கம் தொடங்குகின்றார். எனவே, அதிக கவனம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க இயலாது.

அரசாங்க கெடுபிடிகளும் இருக்கலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.

குருவுடன் சனி இணைந்திருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் மனநிம்மதி குறையத்தான் செய்யும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் வழிபாடும் நெய்விளக்கேற்றுவதும் நன்மையாக அமையும்.

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் இராசிக்கு 7 ½ சனியின் ஆதிக்கம் இதுவரை நடைபெற்று வந்தது. டிசம்பர் 27 ஆம் திகதி முதல் சனி விலகுகின்றது. எனவே, இனி நல்லநேரம் தொடங்குகின்றது.

7 ½ முடிவடைகின்றது. நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல தகவல்கள் இப்பொழுது கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பொருளாதார பற்றாக்குறை அகலும்.

இடமாற்றம் , ஊர்மாற்றம் , உத்தியோக மாற்றம் என்பன ஏற்படும். மேலும் பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கும்.

திருமண வாய்ப்புகள் கை கூடிவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். செய்தொழிலில் கூடுதலான இலாபமும் கிடைக்கும்.

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

இதுவரை உங்கள் இராசியில் ஜென்ம சனியாக சஞ்சரித்துவந்த சனிபகவான் பல தொல்லைகளை தந்தார். டிசம்பர் 27 ஆம் திகதி முதல் குடும்ப சனியாக அதாவது பாதசனியாக மகர இராசிக்கு சஞ்சரிக்கின்றார்.

அங்கு சுமார் 2 ½ ஆண்டு காலம் வீற்றிருந்து குடும்ப முன்னேற்றத்துக்கு வழி வகுத்துக்கொடுப்பார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை குறிப்பிடும் இடத்துக்கு சனிபகவான் பெயர்ச்சியாகி வருவதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கொள்கை பிடிப்போடு செயற்படுவீர்கள். கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் இனிமாறும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 7 ½ சனி முடியும் காலம் நன்மைகளை அள்ளித்தருவார்.

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

இதுவரை விரயஸ்தானத்தில் 12 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் உங்கள் இராசிக்குள் வருகின்றார்.

உங்கள் இராசிநாதன் உங்கள் இராசியிலேயே சஞ்சரிக்கும் இக்காலம் நல்ல காலம்தான். 7 ½ சனியில் ஜென்ம சனியின் ஆதிக்கம் ஆரம்பமாகின்றது.

உங்களுக்கோ உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கோ உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வருவதும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாது.

இருப்பினும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

மேலதிகாரியின் எண்ணம்போல் நடந்துகொள்வதால் அவர்களது மனதில் இடம்பிடிப்பீர்கள். தொழில் நடத்துபவர்கள் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி காண்பர். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு திருமண செலவுகள் ஏற்படலாம்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1 ஆம்,2 ஆம்,3 ஆம் பாதம்)

இதுவரை உங்கள் இராசிக்கு 11 ஆம் இடம் எனப்படும் இலாபஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் மகர இராசிக்கு விரயஸ்தானமான 12 ஆம் இடத்தில் சஞ்சரிக்கின்றார்.

இது 7 ½ சனியின் தொடக்கம். முதல் 2 ½ வருடங்கள் விரயச்சனியின் ஆதிக்கம் வருகின்றது. இதில் உங்களுக்கு முதல் சுற்றா அல்லது இரண்டாவது சுற்றா என்பதை பொறுத்து பலன்கள் அமையும்.

இரண்டாவது சுற்றாக இருந்தால் பொங்கு சனி பலமாக இருந்தால் நற்பலன்கள் உங்களுக்கு வந்துகொண்டேயிருக்கும்.

இருந்தாலும் விரயச்சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் விழிப்புணர்வு தேவை. நண்பர்களில் நம்பிக்கைக்குரியவர்களுடன் பழகுவது நல்லது.

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இதுவரை உங்கள் இராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் மகர இராசிக்கு வருகின்றார். அது உங்களுக்கு இலாபஸ்தானமாகும் அதாவது 11 ஆம் இடம்.

ஆகவே, தொழில் முன்னேற்றமும் அதன்மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எதிரிகள் விலகுவர். விடாமுயற்சிக்கு வெற்றிகிடைக்கும். உயரதிகாரிகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.

வாங்கிய கடனை கொடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மனக்குழப்பம் அகலும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். உடல்நலம் சிறப்பாகி சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள்.