-தமிழ்வாணி (பிரான்ஸ்)
மார்கழி மாதம் பக்தி நிறைந்த மாதம். காயத்திரிக்கு ஈடான மந்திரமும் இல்லை. தாய்க்கு சமமான தெய்வமும் இல்லை. ஏகாதசிக்கு மேலான விரதமும் இல்லை என்று அக்னி புராணம் கூறுகின்றது.
ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வருகின்றன. சில வேளைகளில் 25 ஏகாதசிகளும் வரலாம். இந்த ஏகாதசி விரதம் விஷ்னுவிற்கு உரிய விரதம் ஆகும்.
ஒரு வருடத்தில் எத்தனை ஏகாதசிகள் வந்தாலும் அத்தனை ஏகாதசிகளிலும் ‘வைகுண்ட ஏகாதசி’ சிறப்புடையதாகவும் மேன்மை உள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி விரதம் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று (டிசம்பர் 25) இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இது ‘மோட்ச ஏகாதசி’ என்றும் கூறப்படுகின்றது. விஷ்னு வாசம் செய்யும் இடம் வைகுண்டம்.
வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பும் பக்தர்களுக்கு மோட்சம் அளிக்கும் உன்னதமான திருவிழா ஆகும்.
பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பகல் பத்து நாள், ஏகாதசிக்குப் பின் இரவு பத்து நாள், ஏகாதசி நாள் என்று இருபத்தொரு நாட்கள் மிகவும் சிறப்பாக ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது.
இராப்பத்து பகல்பத்து
இராப்பத்து பகல்பத்து என்றால் என்ன என்று பார்ப்போம். ஆழ்வார்கள் பெருமானின் மீது பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் ஆகும்.
இவை ஆழ்வார்களின் பக்தியின் மேலாக இறைவனை நினைத்து அருளிய அற்புத பாசுரங்கள்.
திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கத்திற்கு கார்த்திகைத் திருநாளன்று வருகிறார். நம் பெருமாள் மீது மனம் உருகிப் பாடுகின்றார். அவரது பாடல்களை கேட்ட பெருமாள் மிகவும் மகிழ்ந்து” உனக்கு என்ன வரம் வேண்டும் தருகிறேன்” என்று கூறினார்.
திருமங்கை ஆழ்வாரும் மகிழ்ந்து “நம்மாழ்வார் அருளிய ஆயிரம் பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்களை தாங்கள் செவி குளிர கேட்க வேண்டும். ஒரு நாளுக்கு நூறு பாடல்களாக 10 நாட்களுக்கு பாடிக் கேட்க வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தார்.
அதைக்கேட்ட பெருமாளும் “நான் கேட்க தயாராக இருக்கிறேன். எப்போது ஆரம்பிக்கலாம்” என்று கேட்டார். அதற்கு ஆழ்வாரும் “மார்கழி வைகுண்ட ஏகாதசியில் இருந்து 10 நாட்கள் வைக்கலாம்” என்று கூறினார்.
இறைவனும் உறுதிமொழி கொடுக்க திருமங்கையாழ்வாரும் மகிழ்ந்தார். இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பெருமாள் வினவ, திருமங்கை ஆழ்வாரும் ‘இராப்பத்து.’ என்ற பெயரை வைக்கலாம் என்றார்.
திருமங்கை ஆழ்வாரால் தான் இராப்பத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்னொரு கார்த்திகைத் திருநாளில் நாதமுனிகள் ஸ்ரீரங்கத்திற்கு வருகிறார். அவரும் இறைவனை மெய்யயுருகி நெஞ்சுருகி வழிபட்டார்.
அவரது பக்தியை வியந்த நம்பெருமாள் “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, “ஆயிரம் பாடல்களை கேட்கும் தாங்கள் மிகுதி மூவாயிரம் பாடல்களையும் கேட்டு மகிழ வேண்டும். அதற்கு தாங்கள் அருள்புரிய வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.
“எனக்கும் கேட்க நல்ல விருப்பமாக இருக்கிறது. ஆனால் இராப்பத்து நடக்கிறதே இதை எப்படி நடத்தலாம்? என்றார். அதற்கு நாதமுனிகள் “சுவாமி ஏகாதசிக்கு பின் பத்து நாட்கள் இராப்பத்து நடைபெறுவதால் ஏகாதசிக்கு முன் பத்து நாட்களை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கு பகல்பத்து என்று பெயர் வைக்கலாம்” என்று விண்ணப்பம் செய்தார்.
நம் பெருமாளும் மகிழ்ந்து 4000 பாடல்களையும் கேட்டால் எனக்கும் மகிழ்ச்சி என்று கூறினார். அதனால்தான் இந்நாட்களில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடப்படுகிறது. இதைத்தான் “பகல்பத்து இராப்பத்து” என்று கூறுவார்கள்.
அரையர் சேவை
அரையர் சேவை என்பது ஸ்ரீரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெறுவதைக் காணலாம். அரையர் என்போர் வைணவ ஆலயங்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் ஆடவர் ஆவர். இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் ஆடியும் பாடியும் நிகழ்ச்சியை நிகழ்த்துவர்.
இவர்கள் கூம்பு வடிவ தொப்பி ஒன்றை தலையில் அணிந்து பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அணிந்துகொண்டு அபிநயம் செய்வர்.
இவர்களுடைய நடனம் பாட்டுக்களை கேட்பதற்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இது நாதமுனிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி விரத முறை
இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் மார்கழி வளர்பிறை தசமி அன்று ஒரு நேர உணவு உண்ணுதல் வேண்டும். மறுநாள் ஏகாதசியாகும்.
அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் சுவாமி அறையில் விளக்கேற்றி பிரபந்தங்கள், திருப்பாவை போன்றவற்றைப் படித்து சுவாமிக்கு ஏற்ற நைவேத்தியம் படைத்தல் வேண்டும்.
ஏகாதசி அன்று உபவாசம் இருத்தல் வேண்டும். துளசி நீர் கலந்த தீர்த்தம் அருந்தலாம். ஆலயங்களுக்கு சென்று பூசைகளில் பங்குபற்றி புராண நூல்கள் அல்லது பிரபந்தங்கள் போன்றவற்றை படிக்கலாம்.
உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்று இரவு முழுவதும் கண் விழித்து இருத்தல் வேண்டும்.
இறை சிந்தனை உடையவர்களாக இருத்தல் வேண்டும். மறுநாள் துவாதசி திதியில் பாரணை செய்தல் வேண்டும். உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும்.
யாராவது இருவருக்காவது உணவு கொடுத்து உண்ணுதல் வேண்டும். அன்னதானம் கொடுப்பது சிறந்த தர்மமாகும். துவாதசி அன்றும் பகலிலும் தூங்காது விழித்திருந்து மாலையானதும் உணவு உண்டபின் நித்திரை செய்தல் வேண்டும்.
வைகுண்ட வாசல் திறத்தல்
பரமபத வாசல், சொர்க்கவாசல் என்று சொல்லப்படுகின்ற வைகுண்ட வாசல் திறக்கும் நிகழ்வு அற்புதமானது. கோடிக்கணக்கான பக்தர்கள் வாசலில் வெளியே காத்திருப்பார்கள்.
பெருமாள் இரத்தினாங்கி ஆடை அணிந்து கம்பீரமாக வெளியே வருவதற்கு ஆயத்தமாக இருப்பார்.
பரமபத வாசல் திறந்து வெளியே வரும் போது பக்தர்கள் பெருமாளின் நாமங்களை உச்சரித்து அவரை மெய்யன்போடு வழிபடுவர்.
பக்தர்கள் எல்லோருக்கும் பெருமாள் காட்சி கொடுப்பார். மனதில் சூது, பொறாமை, வஞ்சனை, பொய், களவு இல்லாமல் இறை சிந்தனை உடையவர்கள் மட்டுமே வைகுண்ட பதம் பெற முடியும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விரதம் வரலாறு
முரன் என்ற அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனது கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.
சிவபெருமான் அவர்களை மகாவிஷ்னுவிடம் செல்லும்படி கூறினார். மகாவிஷ்னுவும் அவர்களை காப்பதாக கூறி என்ற அசுரனுடன் போர் புரிந்தார்.
போர் ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து நடந்தது. விஷ்ணு களைப்புற்று பத்ரிகாஸ்ரமம் குகைக்குள் வந்து ஓய்வு எடுத்தார். அங்கேயும் வந்து போருக்கு அழைத்தான் அசுரன்.
அப்போது திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிவந்தது. இந்த சக்தி அசுரனை நெருங்கும் வேளை அவளிடமிருந்து வெளிப்பட்ட பெரும் ஓலம் முரணை எரித்து சாம்பலாக்கியது.
துயில் நீங்கிய பெருமாள் அப்பெண்ணுக்கு ‘ஏகாதசி’எனப் பெயரிட்டார். உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப்பேறு அளிப்பேன் என்று வரம் கொடுத்தார்.
பெண்சக்தி திருமாலின் மேனியில் தோன்றிய தினம் ‘உற்பத்தி ஏகாதசி’ என்று கூறப்பட்டது.
சொர்க்க வாசல் பலன்
மதுகைடபர் அசுரர்கள் மகாவிஷ்னுவால் வதம் செய்யப்பட்டு வைகுந்த பேறு பெற்றார்கள். இவர்கள் தங்களுக்கு கிடைத்த வைகுண்டப பேறு உலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.
வைகுண்ட ஏகாதசித் திருநாளில் திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசித்து பின்தொடரும் பக்தர்களின் பாவங்களை நீக்கி முக்தி அளிக்க வேண்டும் என வேண்டினர்.
இதன் பொருட்டே சொர்க்க வாசல் திறந்து பக்தர்களுக்கு மோட்சத்துக்கு வழி கூறுவதாக அமைகிறது.
புராணக் கதைகள் பலவற்றை கூறினாலும் மக்கள் நன்மைகள் செய்து நல்லவர்களாக வாழ்ந்து இறைவழிபாடு செய்து உயிர்களில் அன்பு வைத்து பிறருக்கு உதவி செய்து வாழ்ந்து வருவார்களேயானால் அவர்களுக்கு வைகுந்தப்பேறு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.