-ரகுராஜ் தர்மரட்ணம் (ACMA, CGMA)
பிட்கொய்ன் (Bitcoin) விலை கடந்த 2017 டிசம்பரில் 19,000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருந்த பின்னர், அடுத்த ஒரு வருட காலத்தில் 3,100 டொலர்களாக குறைவடைந்தது.
பின்னர் 2019 ஜூனில் 13750 டொலர்கள் உயர்வடைந்த பிட்கொய்ன் விலை, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொவிட்-19 பரவலின் தொடக்க காலத்தில் 3,800 டொலர்களாக குறைவடைந்து இருந்தது.
ஆனால் இப்போது மிகவும் அதிகமாக உயர்ச்சி அடைந்த முதலீடு என்பது பிட்கொய்ன் முதலீடாகும். கடந்த 9 மாத காலத்தில் பிட்கொய்ன் விலையானது ஆறு மடங்காக அதிகரித்து தற்போது 24,000 டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.
இதற்கு அமெரிக்க டொலரின் வீழ்ச்சியை ஒரு காரணமாக கூறமுடியும். பிட்கொய்ன் டொலரில் மதிப்பிடப்படுவதினால் அதன் வீழ்ச்சி என்பது பிட்கொய்ன் விலையை அதிகரிக்கும்.
Covid-19 காரணத்தினால் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் என்ற பீதியினால் பல முதலீட்டாளர்கள் பிட்கொய்னை அதிக அளவு கொள்வனவு செய்தது அதன் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தி இருக்க முடியும்.
இங்கு இருக்கும் வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு செங்குத்தான (Vertical) கோடும் ஒரு மாத விலை ஏற்றத்தாழ்வுகளை குறிக்கின்றன. மஞ்சள் நிறம் விலை அதிகரிப்பையும் சிவப்பு நிறம் விலை வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டுகின்றன.
2020 மார்ச்சுக்கு பின்னர் வந்த 9 மாதங்களில் 7 மாதங்களில் விலை உயர்வு ஏற்பட்டதை அவதானிக்க முடிகிறது.
எதிர்காலத்தில் விலை ஏற்றத்தாழ்வுகளை ஒருவராலும் சரியாக கணக்கிட முடியாது. வரைபடத்தில் உள்ள கணக்கீட்டின் படி பிட்கொய்ன் விலையானது, இங்கு காட்டப்படும் இளஞ்சிவப்பு கிடைக்கோடு (Pink horizontal) 19,000 டொலர்களுக்கு கீழே போகாமல் இருக்கும் பட்சத்தில் மேலும் உயர்வடைந்து செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.
சில மதிப்பிட்டாளர்கள் விலை அதிகரிப்பு 30,000 டொலர்கள் வரையிலும் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். பிட்கொய்ன் முதலீட்டில் ஆபத்துகள் (Risk) அதிகமாக இருப்பதால் முதலீடு செய்வதற்கு முன்னர் அது தொடர்பில் மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து, அவதானத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பு:
கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். அவை தமிழ் அவனியின் கருத்துக்கள் அல்ல.
கட்டுரையாளர்: ரகு தர்மரட்ணம்
தொடர்பு: draguraj@googlemail.com