“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும்” என்ற அவரது பாடல் அவருக்கே பொருந்தும். அந்த அளவுக்கு இந்த வயதிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை கட்டிவைத்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
அவரது 70 ஆவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு இம்முறை கொண்டாடுகிறார்கள். இது வழக்கமான பிறந்தநாள் அல்ல, விசேஷமானது. ஏனெனில் இந்த மாத இறுதியில் தான் கட்சி அறிவிப்பினை வெளியிட இருக்கிறார் ரஜினிகாந்த்.
ஒரு நடிகனாக அறிமுகமானது முதல் சமீபத்தில் ரிலீசான படங்கள் வரை தமிழ்த் திரையுலகில் எப்போதுமே அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.
அவரது பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளித் தந்திருக்கின்றன.
இந்நிலையில் அரசியலுக்கு வருவதாக நீண்டகாலம் சொல்லி வந்த ரஜினிகாந்த் தற்போது அதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த அரசியல் பிரவேசம் மூலம் தமிழக மக்களுக்கு லாபத்தை தரப் போகிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.
விமர்சனங்களும் சவால்களும்
பொதுவாக அரசியலுக்கு வருகின்ற பிரபலங்கள் சமூகம் சார்ந்த நிகழ்கால விவகாரங்களில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துக்களை வைத்தே, அவர்கள் எந்த வகையான அரசியலை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பதை ஓரளவு கட்டியம் கூறமுடியும்.
ஆனால் ரஜினிகாந்தைப் பொறுத்தவரை சமூகப் பிரச்சனைகளில் எந்தவிதமான கருத்துக்களையும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஆணித்தரமாக வெளிப்படுத்தியது கிடையாது என்கின்ற விமர்சனம் உள்ளது.
நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு அரசியலுக்கு வர விரும்பும் ரஜினிகாந்த் முன் எண்ணற்ற சவால்கள் நிறைந்துள்ளன.
அந்த சவால்களுக்கு முகம்கொடுக்கத் தயாரானால் தான் அரசியல் என்ற குழம்பிய குட்டையில் நின்று அவரால் தாக்குப்பிடிக்க முடியும்.
விலைவாசி உயர்வு, கூடங்குளம் அணு உலை, காவிரி நீர், டெல்டா பிரதேசங்களில் இயற்கை வாயு எடுத்தல், ஸ்டெர்லைட் ஆலை, கீழடி அகழாய்வு, தமிழக மீனவர்கள் கடலில் தாக்கப்படுதல், இலங்கை அகதிகள், மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு, நீட் தேர்வு, ‘7 பேர் விடுதலையில்’ காலதாமதம், இந்தி திணிப்பு, டெல்லி விவசாயிகள் போராட்டம், ஜல்லிக்கட்டு என அண்மைக் காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்வேறு பிரச்சனைகளில் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை, களத்தில் வந்து மக்களுக்காக நிற்கவும் இல்லை என்ற கடுமையான விமர்சனங்கள் அவர் மீது உள்ளன.
1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் எழுப்பினார். அப்போது இருந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு அதுவும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. அதைத்தவிர சமகால அரசியலில் சொல்லிக்கொள்ளும் படியாக அவருடைய பங்களிப்பு எதுவும் இல்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்து.
தனக்கு மக்கள் மத்தியில் இருக்கும் பிரபலத்தையும் செல்வாக்கையும் மட்டுமே மூலதனமாக வைத்து கட்சி ஆரம்பிக்கும் ரஜினிகாந்தால் தமிழகத்தின் நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.
தமிழகத்தில் மாவட்ட – வாரியாக மக்களுக்கு உள்ள பிரச்சனைகளில், குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனைகள், விவசாயம் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான நீர் வளம், கனிமவளக் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, ஆற்றுமணல் கொள்ளை, ஆற்று நீர் விரயம் என எண்ணற்ற நீண்டகால சிக்கல்கள் அண்மைக் காலமாக பூதாகரமாகி வருகின்றன.
இந்த விவகாரங்களில் ரஜினிகாந்தின் திட்டங்கள் என்ன என்பது போன்ற கேள்விக்கணைகள் அவரது அரசியல் பிரவேசத்தின் முன்னால் இப்போதே வந்து விழத் தொடங்கிவிட்டன.
இந்த சவால்களை எப்படி சமாளிக்கப் போகின்றார் என்பதில் தான் அவரது வெற்றியும் கட்சியின் எதிர்காலமும் தங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
சினிமாவில் சிகரத்தை தொட்டுவிட்ட ரஜினிகாந்தால் அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வர முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
இந்த ஆண்டு பிறந்தநாள் ரஜினிகாந்திற்கு நல்ல திருப்புமுனையாக அமையட்டும் என்று அவரது ரசிகர்களோடு நாமும் வாழ்த்துவோம்..