(Photo: Facebook/ Namal Rajapaksa)
இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 4.4 மில்லியன் பேர் வரையிலானோர் வேலையில்லா பிரச்சனையை எதிர்நோக்குவதாகவும், அவர்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் இளைஞர், யுவதிகளே எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களை போன்று தற்காலிக வேலை வாய்ப்புகளை வழங்காது நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கே அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.