November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20-20 கிரிக்கெட் தொடர்: வெற்றியை கைப்பற்றியது நியூஸிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட்  தொடரில்,  ஒரு போட்டி எஞ்சிய நிலையில் நியூஸிலாந்து அணி வெற்றியை கைப்பற்றியது.

இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 6.2 ஓவர்களில் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்தில் 34 ஓட்டங்களுடனும் திம் செய்வட் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் கிலென் பிளிப்ஸ் மற்றும் கொன்வே ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 75 பந்துகளில் 184 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை இமயமாக உயர்த்தியது.

கிலென் பிளிப்ஸ் 108 ஓட்டங்களைக் குவித்தார். இதன்போது அவர் 51 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளையும் விளாசினார். நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களைக் குவித்தது.

239 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பம் முதலே ஓட்டங்களைப் பெற முயற்சித்த போதிலும் விக்கெட்டுகளும் இடையிடையே வீழ்த்தப்பட்டன.

அன்ரு பிளெட்ச்சர், ஸிம்ரோன் ஹெட்மயர், அணித்தலைவர் கிரான் பொலார்ட் ஆகியோரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதன்படி 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 3 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச இருபது 20 தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் கைப்பற்றியது.