தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 180 ஓட்டங்கள் இலக்கை இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் கடந்தது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 6 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டிம் பவுமா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் குயின்டன் டி கொக் 30 ஓட்டங்களையும், பெப் டூ பிளஸி 58 ஓட்டங்களையும் வென்டர் டசன் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களைப் பெற்றது. ஷாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்,
பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது பந்தில் ஜேஸன் ரோய் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஜொஸ் பட்லர், டாவிட் மாலன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன.
என்றாலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜொனி பெயார்ஸ்டோ 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 86 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று இங்கிலாந்து வெற்றியை உறுதிசெய்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியீட்டி தொடரில் முன்னிலைப் பெற்றது.