January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வோனர் மற்றும் அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவர்கள் முதல் விக்கெட்டுக்காக 27.5 ஓவர்களில் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

டேவிட் வோனர் 69 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஏரோன் பிஞ்சுடன் இணைந்த ஸ்டீபன் ஸ்மித் ஓட்டங்களைக் குவித்து அணியை மேலும் வலுப்படுத்தினார். இவர்கள் இருவரும் சதங்களைப் பூர்த்தி செய்தனர்.ஏரோன் பிஞ்ச் 114 ஓட்டங்களையும் ஸ்டீபன் ஸ்மித் 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பௌண்டரிகளுடன் 105 ஓட்டங்களையும் குவித்தனர்.

ஐ.பி.எல்லில் பிரகாசிக்கத் தவறிய கிளென் மெக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற,அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 376 ஓட்டங்களைக் குவித்தது. இது இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் அவுஸ்திரேலியா பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
பந்துவீச்சில் முகம்மட் சமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

375 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய அணி 101 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அணித்தலைவர் விராத் கோஹ்லி, மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

என்றாலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டினார். 76 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார். ஷிகர் தவான் 74 ஓட்டங்களைப் பெற்றார்.

ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் ஜோடி 5ஆம் விக்கெட்டுக்காக 128 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஆனாலும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணியின் எதிர்பார்ப்பு பொய்யானது. பின்வரிசை வீரர்கள் வெற்றிக்காக போராடிய போதிலும் அவர்களால் அதனை அடையமுடியவில்லை.

இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களைப் பெற்று 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எடம் ஸம்பா 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசல்வூட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார். தொடரில் 1-0 எனும் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.