July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிவர் புயலால் பெரியளவு பாதிப்புகள் ஏற்படவில்லை’: முதல்வர் பழனிசாமி

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நிவர் புயலால் எதிர்பார்த்த அளவிற்கு தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .

நிவாரண முகாம்களில் 13 லட்சம் பேரை தங்க வைக்கும் அளவிற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் .

கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட எல்லா மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் வாழைமரச் செய்கை  சேதம் அடைந்துள்ளது.

பாதிப்பு குறித்து முழுமையான கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் கொடுத்த பின்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார் .

கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் அவை அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 52 ஆயிரத்து 223 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் .

“உயிர்ச் சேதத்தை தவிர்ப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நேற்று முழுவதும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள சரியான முறையில் நடவடிக்கை எடுத்த காரணத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் பெருமளவில் குறைந்துள்ளது” என்றார் முதலமைச்சர்.

மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் விடாத மழை பெய்து வரும் நிலையில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வரும் 29ஆம் திகதி வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அதன் பின்னர் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும்  அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

 

கடந்து போன நிவர் புயல் இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது . இதனால் ஆங்காங்கே பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னை உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்னும் மழை விடாது பெய்து வருகிறது .இதனால் சென்னை ,கடலூர் புதுச்சேரி, காரைக்கால் ,திருவள்ளூர் என தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

பல பேர் வீடுகளை இழந்து நிர்க்கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் , மீட்புப் பணியை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அபாயமான நிலையிலேயே மக்கள் இருந்து வருகிறார்கள்.