January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா காலமானார்!

photo: Diego Maradona/ Facebook

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் டியேகோ மரடோனா தனது 60 ஆவது வயதில் காலமானார்.

ஆர்ஜண்டீனா அணியின் முன்னாள் வீரரும் முகாமையாளருமான மரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இம்மாதத்தின் முற்பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மதுவுக்கு அடிமையாகியிருந்த அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை தேவைப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

1986 இல் ஆர்ஜண்டீனா அணிக்கு தலைமை தாங்கி உலகக் கோப்பையை வென்றுகொடுத்த மரடோனா, அக்காலப் பகுதியில் கால்பந்தாட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார்.

1978க்குப் பின்னர், ஆர்ஜண்டீனா இரண்டாவது தடவையாக கால்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை சூடிய தருணம் அது.  அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் டியாகோ மரடோனா போட்ட கோல் இற்றைவரை சுவாரஷ்யமான பேசுபொருளாகவே உள்ளது.

‘கடவுளின் கையால்’ கோல் போட்ட மரடோனா

வீரர்களினதும் நடுவர்களினதும் கண்களில் மண்ணைத் தூவி, கண்ணிமைக்கும் நொடியில் பந்தை கையால் பிடித்து கோல் கம்பத்துக்குள் புகுத்தினார் (The hand of God). இந்த கோலின் மூலமே இங்கிலாந்தை காலிறுதியில் தோற்கடித்து ஆர்ஜண்டீனா அரை-இறுதிக்கு முன்னேறியது.

கால்பந்து விளையாட்டு விதிமுறைகளின் படி, அந்த கோல் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.  ஆனால், மரடோனா கையால் தான் கோலடித்தார் என்பதை உறுதிப்படுத்த வீடியோ உதவியுடன் ஆராய்ந்து பார்க்கும் தொழில்நுட்பம் அப்போது நடுவர்களுக்கு இருக்கவில்லை. ஆதலால், அந்த கோல் செல்லுபடியானது.

ஆனால் கண்ணால் கண்ட ஊடகர்கள் அது குறித்து கேள்வியெழுப்பிய போது ‘அது கடவுளின் கை’ என்று மரடோனா நகைச்சுவையாகத் தெரிவித்து தப்பித்தார்.

 

http://https://youtu.be/-ccNkksrfls

மரடோனாவின் கையில் பச்சைக் குத்தபட்டிருந்த இயேசுவின் உருவத்தை மனதில் வைத்தே அவர் அவ்வாறு கூறியதாகவும் பின்னாளில் கூறப்பட்டது.

என்றாலும், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் தனது தவறை ஒப்புக்கொண்ட மரடோனா அதற்கு பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் ஆர்ஜென்டினா சார்பாக நான்கு தொடர்களில் விளையாடியுள்ள மரடோனா 34 கோல்களையும் போட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஆர்ஜண்டீனாவை உலகக் கோப்பை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்ற அவர் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

1997 இல் ஆர்ஜண்டீனாவின் போகா ஜூனியர்ஸ் கழகத்திற்காக விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தனது 37 வது பிறந்தநாளில் மரடோனா முழுநேர தொழில்சார் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி விளையாட்டுத் துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த மரடோனா அதன் பின்பு பயிற்றுனராக புதிய அவதாரம் எடுத்திருந்தார்.

பார்சிலோனா, நாப்போலி கால்பந்து கழகங்களுக்காகவும் விளையாடி சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்திருந்த மரடோனா, கால்பந்து விளையாட்டு உலகம் இதுவரை கண்டுள்ள மகத்தான வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

மரடோனாவின் மறைவு ஆர்ஜண்டீனாவுக்கும், கால்பந்தாட்ட உலகுக்கும் பேரிழப்பு என ஆர்ஜண்டீன நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி அனுதாபம் வெளியிட்டுள்ளார்.