அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளையும் இழக்கும் நிலைக்கு இந்திய அணி வீரர்களான ரோஹித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இதுவரை அவுஸ்திரேலியாவுக்கு புறப்படாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் அடுத்த மாதம் 17ஆம் திகதி தொடங்குகிறது.
ரோஹித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஐபிஎல் போட்டிகளின் போது உபாதைக்குள்ளாகி அதிலிருந்து மீண்டுவர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சிகள் பெங்களூரில் உள்ள தேசிய பயிற்சியகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் டிசம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றால்தான் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவது குறித்து எதிர்பார்ப்பு வைக்க முடியும்.
ஆனால், ரோஹித் சர்மாவுக்கு மாத்திரம் டிசம்பர் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியா பயணமாக பெங்களூர் பயிற்சியகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித் சர்மா டிசம்பர் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு சென்றாலும் அங்கே அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அப்போது 22 ஆம் திகதியாகிவிடும். அதன் பிறகு அவுஸ்திரேலிய காலநிலைக்கு ஏற்றவாறு தயாராகுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே 29 ஆம் திகதியின் பின்னரே ரோஹித் சர்மாவினால் களமிறங்க முடியும். அப்போது முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முடிவடைந்திருக்கும்.
முதல் போட்டி 17 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி “பொக்ஸிங் டே” கிரிக்கெட்டாக 26 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.
இதனால் தற்போதைய நிலையில் ரோஹித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்புகள் இல்லை.
முதல் போட்டியுடன் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் நாடு திரும்புவதால் இந்திய அணிக்கு இது நெருக்கடியைக் கொடுக்கும் என கருதப்படுகிறது.