July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம்: “நொக் அவுட்” சுற்றை நெருங்கியுள்ள செல்சி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்தின் செல்சி கழக அணி சிறந்த 16 அணிகளின் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

பிரான்ஸின் ரென்னஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் செல்சி கழக அணி இந்த வாய்ப்பைப் பெற்றது.

போட்டியை சவாலாக ஆரம்பித்த செல்சி அணி 22 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டது. ஹட்சன் ஒடொய் அந்த கோலைப் போட்டார்.

ரென்னஸ் அணியால் முதல் பாதியில் கோலடிக்க முடியவில்லை. அதன்படி முதல் பாதியில் 1-0 எனும் கோல் கணக்கில் செல்சி அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் அபாரமாக விளையாடிய ரென்னஸ் கழக அணி வீரர்கள் கோல் போடுவதற்கு பல முயற்சிகளை எடுத்தார்கள்.

அவர்களின் முயற்சிக்கு 85 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. கியிரெஸி கோலொன்றைப் போட்டதால் கோல் எண்ணிக்கை சமநிலை அடைந்ததுடன் செல்சி அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது.

ஆனாலும், விட்டுக்கொடுக்காமல் விளையாடிய செல்சி அணி 90 ஆவது நிமிடம் முடிவடைந்து உபாதைக்கான நேரத்தில் மற்றொரு கோலைப் போட்டு அசத்தியது.

கிரோட் அந்தக் கோலைப் போட்டு வெற்றியையும் உறுதிசெய்தார். இறுதியில் செல்சி கழக அணி 2-1 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் சிறந்த 16 அணிகளின் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் செல்சி அணி அதிகரித்துக்கொண்டது. ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் “ஈ” குழுவில் போட்டியிடும் செல்சி அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது.

இந்தக் குழுவில் செவில்லா கழக அணி இரண்டாமிடத்திலும், ரென்னஸ் கழக அணி நான்காமிடத்திலும் உள்ளன.