January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- ஆஸி. கிரிக்கெட் தொடரில் மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவு

(Photo: Shreyas Iyer/ Facebook)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 சர்வதேச ஒருநாள், 3 சர்வதேச இருபது 20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதன் முதல் அம்சமாக எதிர்வரும் 27 ஆம் திகதி சர்வதேச ஒரு நாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.  அதனைத் தொடர்ந்து சர்வதேச இருபது 20 தொடர் டிசம்பர் 4 ஆம் திகதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பெயரிடப்பட்டு தற்போது அவர்கள் அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்தியா திரும்பவுள்ளார். மனைவிக்கு முதல் பிரசவம் நடைபெறவுள்ளதால் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அத்துடன், துடுப்பாட்ட நட்சத்திரமான ரோஹித் சர்மாவும் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுகின்றமை நிச்சயமற்று போயுள்ளது. முழு உடல் தகுதி பெறாததால் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

இதனால் டெஸ்ட் அணிக்கான மாற்று துடுப்பாட்ட வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் பெயரிடப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே சர்வதேச இருபது 20, சர்வதேச ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

தற்போது அவருக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இடம்பெறாத பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.