
(Photo: Daniil Medvedev/Facebook)
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒஸ்ரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி ரஷ்யாவின் டெனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
சர்வதேச தரவரிசையில் முதல் எட்டு வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்றது.
நட்சத்திர வீரர்களான சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச், ஸ்பெய்னின் ரபேல் நடால் ஆகியோர் அரையிறுதிகளில் தோல்வியடைந்தனர்.
இதற்கமைய டொமினிக் தீம் மற்றும் மெட்வடேவ் ஆகியோர் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். போட்டியின் முதல் செட்டை 6-4 எனும் கணக்கில் டொமினிக் தீம் கைப்பற்றினார்.
என்றாலும் அடுத்த இரண்டு செட்களிலும் திறமையை வெளிப்படுத்திய டெனில் மெட்வடேவ் 7-6, 6-4 எனும் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார். போட்டி இரண்டு மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் நீடித்தது.
இந்தத் தொடரில் அவர் முதல் மூன்று இடங்களை வகிக்கும் வீரர்களை தோற்கடித்தே இந்த சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.