(Photo: Rohit Sharma/Facebook)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா உடற் தகுதியை நிரூபிக்கும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் ஆரம்பத்தில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளின்போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு உபாதையால் இந்த நிலைமை ஏற்பட்டது.
எனினும் தற்போது உடற் தகுதி சீராகவுள்ளதென ரோஹித் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அரைச்சதம் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் ஈட்டிக்கொடுத்தார்.
அதன்பிறகு ரோஹித் சர்மாவின் உடற் தகுதி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா இணைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் உடற் தகுதியை நூறு வீதம் உறுதிப்படுத்திய பின்னரே அவர் அணியில் இடம்பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் பயிற்சியகத்தில் ரோஹித் சர்மா உடற் தகுதியை நிரூபிக்கும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
முழு உடற் தகுதியை எட்டியதும் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவார். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறையை பின்பற்றவுள்ளதால் வெகுவிரைவில் ரோஹித் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது .
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.