January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்”: சிறந்த நான்கு வீரர்களின் சுற்றில் நடால்

(Photo: Rafa Nadal/ Facebook)

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயினின் ரபேல் நடால் சிறந்த நான்கு வீரர்களின் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.

இதற்கான போட்டியில் அவர் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸ்டிஸிபாஸை வெற்றி கொண்டார்.

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் லண்டனில் நடைபெறுகிறது. 50ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்த தொடரில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை வகிக்கும் வீரர்கள் விளையாடுகின்றனர்.

முதல் சுற்றில் தலா நான்கு வீரர்கள் வீதம் இரண்டு அணிகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுவதுடன் அந்த இரண்டு அணிகளிலும் முன்னிலைப் பெறும் இருவர் சிறந்த நான்கு வீரர்களின் சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் ரபேல் நடால் ஒரு போட்டியில் ஸ்டெபனோஸ் ஸ்டிஸிபாஸை எதிர்கொண்டார். போட்டியில் முதல் செட்டை 6-4 என நடால் கைப்பற்றினார். என்றாலும் இரண்டாம் செட்டில் 6-4 என ஸ்டெபனோஸ் ஸ்டிஸிபாஸ் முன்னிலை பெற்றார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட மூன்றாம் செட்  6-2 எனும் கணக்கில் தன்வசப்படுத்திய நடால் வெற்றியை உறுதிசெய்துகொண்டார். இந்த வெற்றியின் பிரகாரம் சிறந்த நான்கு வீரர்களின் சுற்றுக்கும் அவர் தெரிவானார்.

34 வயதுடைய ரபேல் நடால் இதுவரை ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியனானதில்லை என்பதுடன் இரண்டு தடவைகள் இறுதி போட்டிவரை முன்னேறியுள்ளார் எனவும் நினைவுகூரத்தக்கதாகும்.