January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

16 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 16 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளத் தயாராகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இறுதியாக 2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து சர்வதேச கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடியிருந்தது.

எனினும், 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து எந்தவொரு அணியும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் சிம்பாப்வேயும், இலங்கையும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடி, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தும் சர்வதேச கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் செல்லத் தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபது20 உலகக் கிண்ணத் தொடருக்கான முன்னோடிப் பயிற்சியாக இந்தப் பயணத்தை இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது20 தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடவுள்ளதுடன், குறித்த போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கராச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

2021 ஒக்டோபர் 16 ஆம் திகதி இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.