
ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு கொள்முதல் விலையில் 80% வரை கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் முதலாவது பதிவின் பின் ஒரு வருடத்திற்கும் மேலாக உள்நாட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு இவ் சலுகையை வழங்க இலங்கை மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.
நிதி குத்தகை சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ், இந்த ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான மதிப்பு விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மோட்டர் வாகனங்களுக்கான கடன் மதிப்பீட்டின் போது குத்தகை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
2020, ஏப்ரலில் ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட மோட்டர் வாகனங்களுக்கு 70% வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இதேவேளை, இலங்கையில் வாகன இறக்குமதிக்கு 2020 மார்ச் 19 ஆம் திகதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.