January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தங்கத்தின் விலை மேலும் உயருமா?

-ரகு தர்மரட்ணம் (ACMA, CGMA)

அறிமுகம்

தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (ounce) பெப்ரவரி 2009 முதல் ஆகஸ்ட் 2011 வரையான 18 மாத காலத்தில் $900 இலிருந்து $1900 ஆக அதிகரித்திருந்ததை யாவரும் அறிந்திருப்போம். அதன் பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில்- நவம்பர் 2015இல்- $1050 வரை வீழ்ச்சி அடைந்திருந்தது.

பின்னர் ஜூன் 2019இல் தங்கத்தின் விலை $1375ஐ அடைந்தபோது, அது $1900 ஐ எட்டும் என்றும், விலை மேலும் கூடிச் செல்லும் என்றும் வேறு இதழ்களில் வந்த எனது முன்னைய கணிப்பில் சொல்லியிருந்தேன். (கீழே இருக்கும் வரை படத்தைப் பார்ப்பதன் மூலம் இதனை அறிய முடியும்).

விலை உயர்விற்கான காரணங்கள்

*தங்கத்தின் விலை U.S Dollar இல் மதிப்பிடப்படுகின்றது. எனவே U.S Dollar-இன் வீழ்ச்சி என்பது தங்கத்தின் விலை உயர்வதற்கு மிகப்பெரிய ஒரு காரணமாகும்.

*வட்டி வீத வீழ்ச்சியும் தங்கத்தின் விலை உயர்விற்கு காரணமாகும். (Covid-19 மூலம் ஏற்படவிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை காரணமாகக் காட்டி) உலகத்தில் இருக்கும் பல மத்திய வங்கிகள் வட்டி வீதத்தைக் குறைத்து கொண்டு வருகின்றன. வட்டி வீதம் உயர்வடைந்து செல்லும் போது தங்கத்தின் விலை குறையும். வட்டி வீதம் குறைந்து செல்லும் போது தங்கத்தின் விலை அதிகரித்து செல்வது ஒரு நடைமுறையாகும்.

*மற்ற எந்த விதமான பொருட்களையும் போல் தங்கத்தின் ‘தேவை மற்றும் வழங்கல்’ (Demand and supply) விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் பண்டிகை இருப்பதனால் தற்போதுள்ள $1950 விலையை விட அதிக கேள்வி (Demand) இருப்பதனால் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களுக்கு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

*தங்கத்தின் விலை உயர்விற்கு இன்னும் ஒரு காரணமாக மிகப் பெரிய வங்கிகள் மற்றும் Hedge Fund நிறுவனங்களை குறிப்பிடலாம். வரைபடங்களை மிக நுட்பமாக ஆராய்வதன் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக கீழே உள்ள வரைபடத்தில் இருக்கும் பச்சை நிறக்கோடு இருக்கும் விலையான $1375இற்கு மேல் விலை உயர்ந்தால்- தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என கருத்தினைக் கொள்வதால்- விலைகள் மேலும் அதிகரிக்கும்.

குறித்த நிறுவனங்கள் Financial spread trading என்ற அடிப்படையில் தங்கத்தை கொள்வனவு செய்யாமலேயே அதன் எதிர்கால விலை மாற்றங்களை ஊகிப்பது விலை ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும்.

முடிவுரை

வரைபடங்களை ஆராய்வதன் மூலம்-தங்கத்தின் விலை $1850க்குந கீழே சரிவடையாமல் இருந்தால்- இந்த வருடம் முடிவடைவதற்கு முன்னர் $2300 என்ற நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுன் நாட்டின் 55 வீதமான தங்க கையிருப்புகளை (Gold reserves) 1999 தொடக்கம் 2002 இடைப்பட்ட காலத்தில் சராசரி விலையாக $275 இற்கு (அவுன்ஸ் விலை) விற்பனை செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். அவை தமிழ் அவனியின் கருத்துக்கள் அல்ல.