
டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு பங்கு பரிவர்த்தனை மற்றும் இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து பங்குச்சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்து இருந்தது.’ எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்’ (Hyper leap to the future) என்ற தொனிப்பொருளின் கீழ் இது டிஜிட்டல் மயப்படுத்தபட்டுள்ளது. இன்றையத் தினம் அதனை திறந்து வைத்த பிரதமர், கொழும்பு பங்குச்சந்தையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

கொழும்பு பங்குச்சந்தை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதன் ஊடாக புதிய முதலீட்டாளர்களுக்கு கிளை காரியாலயங்களுக்கு செல்லாது மத்திய வைப்பொன்றை ஆரம்பித்துக் கொள்ளலாம்.அதற்கமைய, கையடக்க தொலைபேசி பாவனையின் ஊடாக நாடளாவிய ரீதியில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை அல்லது தரகு நிறுவனங்களுக்கு செல்லாது கணக்குகளை ஆரம்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.அதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு பங்கு கொடுக்கல் வாங்கல்களுக்கு தடையாக விளங்கிய தூரப்பிரச்சனை தவிர்க்கப்படும்.
டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் பெருந்திரளான தகவல்களை உள்ளடக்கி கொழும்பு பங்கு பரிவர்த்தனை, மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் இணையத்தளம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முதலீடு, கல்வி, நிதி எழுத்தறிவு என்பவற்றை இலக்காக கொண்டு இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிமுகப்படுத்தும் யூடியூப் (YouTube) சேனலும் இன்று வெளியிடப்பட்டது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் நவீன பதிப்பின் ஊடாக சந்தை கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக மேற்கொள்ளவும் கணக்குகளை விரும்பிய இடத்திலிருந்து விரும்பிய நேரத்தில் இலகுவாக சரிபார்க்கவும் வசதிகள் காணப்படுகின்றன.