

இலங்கை ஜோதிடர் ஆயர்பாடி த.ம.ராமகிருஷ்ணன்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 01ஆம் பாதம் பிறந்தவர்கள்)
ராகு 02இல் இருப்பதால் பண விடயங்களில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
பேச்சில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களிலும் சிரமங்கள் ஏற்படலாம். கல்வியில் கவனம் தேவைப்படும். கேது 08-இல் இருப்பதால் உடல் நலம், உடற் சுபத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
மருந்துகளில் நம்பிக்கை வைக்கமுடியாது. இறை வழிபாடு செய்வதால் நன்மை பெற முடியும். சுமாரான காலம்.

(கார்த்திகை 02, 03, 04ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 01, 02ஆம் பாதங்கள் பிறந்தவர்கள்)
ராகு உதயத்தில் இருப்பதால் உடல் நலத்தை கவனிக்க வேண்டும். இது ஒரு வித நிலைமாறும் காலமாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இடம்பெறும்.
அதிகம் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கலாம். கேது 07-ல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரது உடல்நலம் கவனிக்கப்படுதல் வேண்டும். குடும்ப ஒற்றுமையை பேணிக் கொள்ளுங்கள். உதவிகள் சரிவரக் கிடைக்க வாய்ப்பில்லை. இறை வழிபாடு ஆறுதல் தரும்.

(மிருகசீரிடம் 03, 04ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 01, 02, 03-ஆம் பாதங்கள் பிறந்தவர்கள்)
ராகு 12-ல் இருப்பதால் பணச்செலவு அதிகம் ஏற்படலாம். தூர இடத்துப் பிரயாணங்களுக்கும் இடமுண்டு. வசதி வாய்ப்புக்கள் குறையலாம்.
எனவே எதிர்பார்ப்புக்களை குறைப்பது நல்லது. கூடியவரை அலைச்சலை தவிருங்கள். கேது 06-ல் இருப்பதால் பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். பகை விரோதங்கள் தீரும். காரணம் புரியாத வழிகளில் பணவரவு காணப்படும்.

(புனர்பூசம் 04ஆம் பாதம், பூசம், ஆயிலியம் பிறந்தவர்கள்)
ராகு 11-ல் இருப்பதால் எதிர்பாராத வழிகளில் சிறப்பான பணவரவு உண்டாகும். பொருளாதாரம் நன்கு அமையும்.
தொழில் சிறப்படையும். அந்நிய பிறமனிதர்களால் உதவி கிடைக்கும். கேது 05-ல் இருப்பதால் நிம்மதி குறையலாம். இதற்கு இடங்கொடுக்க வேண்டாம். புத்திரர்களையிட்ட மனக்கிலேசங்கள் அதிகரிக்கும். மனதிற்கு ஆறுதல் குறைந்த காலமாகும்.

(மகம், பூரம், உத்தரம் 01ஆம் பாதம் பிறந்தவர்கள்)
ராகு 10-ல் இருப்பதால் புதிய தொழில்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கலாம். தொழிலில் குழப்பங்களும் வரக்கூடும். நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
புதிய சூழல் காணப்படலாம். கேது 04-ல் இருப்பதால் வீடு, வாகனம் போன்ற விடயங்களில் கவனம் தேவை. புதிய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டாம். தாயாரது சுபத்தையும் கவனமெடுத்து பேணிக் கொள்ளுங்கள்.

(உத்தரம் 02, 03, 04ஆம் பாதம், அத்தம், சித்திரை 01, 02ஆம் பாதம் பிறந்தவர்கள்)
ராகு 09ல் இருப்பதால் சொத்துக்கள் உடைமைகளில் கவனம் தேவை. புதிதாக எதையும் வாங்க வேண்டாம்.
தகப்பனாரது சுகத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.கேது 03-ல் இருப்பதால் பணவரவு காணப்படும். சகோதரர்களது சுபம் கவனிக்கப்பட வேண்டும். போட்டிகளில் ஈடுபடவேண்டாம்.

(சித்திரை 03, 04ஆம் பாதம், சுவாதி, விசாகம் 01,02,03ஆம் பாதம் பிறந்தவர்கள்)
ராகு 08-ல் இருப்பதால் உடல்நலம் உடற்சுபம் கவனிக்கப்பட வேண்டும். பிரயாணங்கள் அதிகமாக காணப்படலாம்.
அலைச்சலும் இருக்கவே செய்யும். ஆனால் பண வரவில் குறையிருக்காது. கேது 02ல் இருப்பதால் குடும்ப சுபம் கவனிக்கப்பட வேண்டும். எவருக்கும் உத்தரவாதம் வழங்க வேண்டாம். பணவிடயங்களில் கவனம் தேவை.

(விசாகம் 04ஆம் பாதம், அனுஷம், கேட்டை பிறந்தவர்கள்)
ராகு 07-ல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரது சுபம் பற்றி கவனம் செலுத்துங்கள். நெருங்கிப் பழகுபவர்களைவிட அந்நிய பிற மனிதர்களால் உதவி கிடைக்கலாம்.
எவரையும் நம்பாதீர்கள். கேது உதயத்தில் இருப்பதால் உங்களது உடல் நலத்திலும் சற்றுக்கவனம் செலுத்துங்கள். காரணம் புரியாத மனக்குழப்பங்கள் காணப்படலாம். மனம் அமைதி பெற கடவுள் வழிபாடு, தியானம் செய்யுங்கள்.

(மூலம், பூராடம், உத்தராடம் 01ஆம் பாதம் பிறந்தவர்கள்)
ராகு 06-ல் இருப்பதால் பணம் பொருளாதார வருமானங்கள் நன்கு காணப்படும். பகை விரோதங்கள் இல்லாமல் போகும். முன்பு இருந்ததை விட ஆறுதலான மனோ நிலை காணப்படும்.
கேது 12-ல் இருப்பதால் யாத்திரைகள் தூர இடத்து பிரயாணங்கள் செய்யவேண்டி வரலாம். ஆன்மீக இறை வழிபாடுகளில் பங்கு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும். சுகங்களை விரும்பாதீர்கள். எதிர்பார்ப்பவை கிடைக்காது.

( உத்தராடம் 02, 03, 04ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 01, 02ஆம் பாதம்)
ராகு 05-ல் இருப்பதால் சற்று அமைதிக்குறைவு காணப்படலாம். புத்திரர்களையிட்ட யோசனைகள் அதிகரிக்கும். ராகு சுக்கிரன் வீட்டிலிருக்க சுக்கிரன் உங்களுக்கு சுபம்தரும் கிரகமாவதால் தீமைகள் வரமாட்டாது.
கேது 11-ல் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவிற்கும் இடமுண்டு. ஆனால் எதற்கும் ஆசைப்படாதீர்கள். கிடைப்பதை பெற்றுக் கொள்ளுங்கள்.

(அவிட்டம் 03, 04ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 01, 02, 03ஆம் பாதம்)
ராகு 04ல் இருப்பதால் வீடு, வாகனம் சம்பந்தமான காரியங்களில் செலவுகள் இருக்கலாம். தாயாரது உடல் நலம் கவனிக்கப்பட வேண்டும்.
புதிய வியாபாரம் தற்போது ஆரம்பிக்க வேண்டாம். கேது 10-ல் இருப்பதால் செய்கின்ற காரியங்களில் ஒரு வித குழப்பநிலை காணப்படலாம். தொழில் மன அமைதியை தராது. சகித்துக்கொண்டு கருமங்களை தவறாமல் செய்யுங்கள்.

(பூரட்டாதி 04ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி பிறந்தவர்கள்)
ராகு 03-ல் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையும். ஆனால் புதிதாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இருப்பவற்றையே மேலும் முன்னேற்ற முயல்வதே நல்லது.
கேது 09-ல் இருப்பதால் சொத்துக்கள் உடைமைகளில் கவனம்தேவை. தகப்பனாரது சுபம் கவனிக்கப்பட வேண்டும். பழைய பொருட்களால் நன்மையுண்டு.
முக்கிய கவனிப்பு:- இங்கு தரப்படுபவை கோள்களின் சஞ்சார பலன்களாகும். இவை மழைகாலம் கோடை காலம் போன்றவை. ஆனால் நீங்கள் பிறந்துள்ள தனிப்பட்ட ஜாதக ரீதியாக கிரகங்கள் நல்ல நிலையில் இருந்து தற்போது உங்களுக்கு நடைபெறும் மகா தசாபுத்திகளும் நன்மையாக இருப்பின் இப்படியான கோசார பலன்களால் தீமைகள், சிரமங்கள் ஏற்படமாட்டாது.