November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓவியர் ஆசை இராசையா….!

– கவிஞர் ஜெயசீலன் தனபாலசிங்கம்
(யாழ்ப்பாணம்)

வாழ்ந்த வியப்பு
‘ஆசை இராசையா’ என்ற அதிசய
அபூர்வ மரபு ஓவியன் பூமியின்
பாச வலையறுத்தேகினான்; ஆம் கூடு
பாய்ந்தெவ் ஓவியத் துள்ளே உறைந்துளான்?
தேசம் தாண்டி உலகப் புகழ் பெற்ற
தேர்ந்த கலைமகன்; பார்க்க சாமானியன்.
நேசன், நீராய் நெருப்பாயும் நின்றவன்.
நீங்கினான் எமை விட்டு …என் செய்குவோம்?

எழில் குலுங்கும் இயற்கையை…தூரிகை
இழைகளால் வர்ணக் குழம்பைக் குழைத்தள்ளி
ஒளிர ஓவியம் ஆக்கி …இரசிப்பவர்
உறைய வைத்த மா மேதை நம் மேதைகாண்!
பழகியோர், பெரியோரை, உயிர் துள்ளும்
படங்களாகப் படைத்து …அவை புவி
அழிந்திடும் போதும் அழியா வரம் பெற
அருள் புரிந்திட்ட எம் ‘இரவி வர்மனாம்’!

பாடப் புத்தகத்தில் சித்திரங்களால்
பயிலும் நாட்களில் நெருங்கிப் பழகியும்,
வேறு வேறெழில் ‘முத்திரை’ தன்னிலே
முகங்கள் காட்டியும், “புகைப்படமே இது
பார்” எனப் பலர் பந்தயம் கட்டிட
பரவசங்களை ஊட்டியும், ஓவியச்
சாலையில் வியப் பேற்றியும், ‘விம்பமாய்த்’
தந்த தொகுப்பினால் வீழ்த்தியும்….வென்றவன்!

மேவி வாரிய வெண்மைத் தலை முடி,
மென் குறுந்தாடி…பிறவிக் கலைஞரின்
ஞானச் செருக்கு, இயல்பாய் எழும் கம்பீர
நடை,இவை கொண்டும் அன்பும் எளிமையும்,
சீரிய பண்புச் சொற்களும், யாதையும்
செயலில் காட்டிடும் செம்மையும், சேர்ந்த நம்
‘ஆசை இராசையா’ எனும் ‘ஈழ ஓவிய
அப்பனைப்’ புற்று நோயா அரித்தது?

ஈழ மரபோ வியத்தின் அடையாளம்.
எங்கள் மனம் குணம் தீட்டிய சித்திரம்.
வாழ்வை வனப்பை வறுமை வலியை நம்
மண் மணம் எழ வரைந்த சரித்திரம்.
காலம் அழிக்காக் கலையை படைத்த கை.
கவிதைகள்….நிறங்கள் கொண்டு யாத்த மெய்.
வாழ்ந்த வியப்பு…மறைந்தின்று போனதே!
வந்த வெற்றிடம் நிரம்பாது என்றுமே!

ஆசை இராசையா – வாழ்க்கைக் குறிப்பு
ஈழத்தின் புகழ்பெற்ற ஓவியர் ஆசை இராசையா கடந்த ஆகஸ்ட் 29-ம் திகதி யாழ். தெல்லிப்பழையில் காலமானார்.

74 வயதான ஓவியர் ஆசை இராசையா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இயற்கை எய்தினார்.

நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் விளங்கிய ஆசை இராசையா, இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.

அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர், யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

நல்லூர் பிரதேச செயலகம் வழங்கிய கலைஞானச் சுடர் (2009), வடமாகாண ஆளுநர் விருது (2009), கலாபூஷணம் விருது (2010), கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012), ஞானம் சஞ்சிகை விருது (2012), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ‘தமிழியல் விருது’ (2013), திருமறைக் கலாமன்றம் வழங்கிய கலைஞானபூரணன் விருது (2014) உள்ளிட்ட பல கௌரவங்களை பெற்றுள்ள ஓவியர் ஆசை இராசையா -மண் மணம் வீசும் காலத்தால் அழியாத பல ஓவியங்களை விட்டுச் சென்றுள்ளார்.