November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்தல விமான நிலையத்துக்கு புத்துயிரூட்ட புதிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் கடந்த மைத்திரி-ரணில் ‘நல்லாட்சி’ காலத்தில் “உலகின் வெறுமையான” விமானநிலையங்களில் ஒன்றாக காணப்பட்ட மத்தல ராஐபக்‌ஷ சர்வதேச விமானநிலையத்துக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கையில் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது.

இந்த விமானநிலையத்தை முழுமையாக இயங்கச் செய்து மேலும் அபிவிருத்தி செய்வதன்மூலம் இலங்கையை பிராந்தியத்தின் முக்கிய வணிக மற்றும் தொழிற்துறை கேந்திர நிலையமாக மாற்ற எதிர்பார்ப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க டினுஷான் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுடன் மத்தல விமானநிலையத்துக்கு இன்று சென்றிருந்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ மற்றும் மத்தல விமானநிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்றும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்தல விமான நிலையத்தை ஆசிய பிராந்தியத்தில் செயற்திறன் மிக்க தளமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர்கள் இங்கு தெரிவித்தனர்.முதல்கட்டமாக அதிக விமான சேவைகளை ஈர்க்கக்கூடிய விதத்தில் வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் திறந்துவைக்கப்பட்ட மத்தல விமானநிலையம் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டது. அதற்காக மொத்தமாக செலவான 209 மில்லியன் டொலர் நிதியில் 190 மில்லியன் டொலர் சீனாவிடமிருந்து கடனாக பெறப்பட்டது.

முன்னாள் நெல் களஞ்சியம்

இந்தக் கடனை மீளச்செலுத்துவதில் சிரமங்கள் உள்ளதாக கூறிய கடந்த நல்லாட்சி அரசாங்கம் விமானநிலையத்தை இந்தியாவிடம் கொடுத்துவிடத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்திருந்தது.

இப்போது, பல்வேறு சர்வதேச விமானசேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்ற புதிய அரசாங்கம், விவசாய மற்றும் கடலுணவு ஏற்றுமதிகளுக்கும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் மத்தல விமானநிலையம் சிறந்த தெரிவாக இருக்கும் என்று கூறியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விமானநிலையத்தின் ஒருபகுதி நெல் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது