May 20, 2025 18:10:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘திலீபன் நினைவேந்தல்’ மீதான அரசின் தடையும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும்

-குகா

தங்களின் நினைவேந்தல் உரிமையை அரசு மறுத்துவிட்டதாக கிளர்ந்தெழுந்தது தமிழர் தரப்பு.

திலீபன் மரணித்த நாளான செப்டெம்பர் 26-ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான முறையில் நடத்த தமிழ் மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

அந்த நிகழ்வை நடத்த விடாமல் செய்ய பொலிஸார் மூலம் நீதிமன்றங்களின் தடையுத்தரவுகளை அரசு பெற்றுக்கொண்டது.

திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு, நினைவேந்தல் நடத்தினால் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் பெற்றுவிடுவார்கள், ஆன படியால் நினைவேந்தலை தடை செய்ய வேண்டும் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் தடையுத்தரவை பெற்றனர்.

அந்தத் தடை உத்தரவைக் காட்டி, நினைவேந்தல் மேற்கொண்ட எம்.கே சிவாஜிலிங்கத்தை கைது செய்த பொலிஸார் பின்னர் பிணையில் விடுவித்தனர்.

நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா  களம் இறங்கினார். சகல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

சாவகச்சேரி சிவன் கோயிலுக்கு நகர்ந்த போராட்டம்

சகல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி கலந்துரையாடி, நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் அரசின் முடிவை நீக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பினார்கள். 

அந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்தோ பிரதமரிடமிருந்தோ குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பதில் ஏதும் வரவில்லை.

இந்நிலையில் மீண்டும் கூடிய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் செல்வச் சந்நிதி ஆலய வளாகத்தில் செப்டம்பர் 26-இல் அடையாள உண்ணாவிரதம் நடத்தவும், 28-இல் வடக்கு, கிழக்கு முழுவதும் ஹர்த்தால் நடத்தவும் முடிவு செய்தனர்.

இந்த அறிவிப்பு வந்ததும் பருத்தித்துறை நீதிமன்ற பிரதேசத்தில் நினைவேந்தலை தடை செய்யும் உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் ஊடாகப் பொலிஸார் பெற்றனர்.

அன்றிரவே மல்லாகம் நீதிமன்ற பிரதேசத்திலும் நினைவேந்தலை தடை செய்யும் உத்தரவை நீதிமன்றம் ஊடாக பொலிஸார் பெற்றனர்.

ஆனால் சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆகிய நீதிமன்றங்களின் ஊடாக நினைவேந்தல் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் நினைவேந்தல் தடையுத்தரவு பெறாத சாவகச்சேரி நீதிமன்ற நியாயாதிக்க பிரதேசத்தில் சாவகச்சேரி சிவன் கோயில் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் முன்னெடுத்தனர்.

ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்கள் அதன்பின் ஆலய வளாகப் பகுதியில் தார்பாலை  விரித்து அமர்ந்து விட்டார்கள்.

பொலிஸாரால் எதுவும் செய்ய முடியாது போனது. கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர.

உண்ணாவிரதத்தில் சிறு எண்ணிக்கையானவர்களே ஆரம்பத்தில் அமர்ந்திருந்தனர். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளூராட்சி சபைகளின் அங்கத்தவர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், பெண்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர்.

திலீபன் மரணித்த 10.48 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம் மாலையில் எழுச்சியுடன் முடிவடைந்தது.

பல்வேறு தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் அரசும் பொலிஸும் இராணுவமும் போட்ட போதும், எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் தமது உரிமைப் போராட்டத்தை செய்து முடித்தது தமிழர் தரப்பு.

நினைவேந்தல் தடைக்கு எதிராக வடக்கு-கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலும் எழுச்சியுடன் நடந்து முடிவடைந்தது.

தமிழர் தரப்பின் செய்தி

பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போதும், வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

ஹர்த்தாலுக்கு சகல தரப்பினரும் ஆதரவு வழங்கியதால் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

நினைவேந்தல் தடைகள் கடந்த காலங்களிலும் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டன. அந்தத் தடையை நீக்க சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் செயற்பட்டார்.

இம்முறை அவரை வழக்குக்கு அவரது எதிர்பாளர்கள் அழைக்கவில்லை. இதனால் தடையுத்தரவை விலக்க முடியாமல் போனது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

அவ்வாறு சட்டத்தரணி சுமந்திரன் மூலம் தடை நீக்கப்பட்டிருந்தால் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையும் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியையும் கண்டிருக்க முடியாது.

தமிழ்க் கட்சிகளின் அழைப்பில் வடக்கு-கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு பெரும் எடுப்பில் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

காணாமற்போனோரின் குடும்பத்தவர்கள் தமது உறவுகளைத் தேடிப் போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோல் சிறிய சிறிய போராட்டங்களே கடந்த 11 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டன.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஓரணியில் நின்று பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

தமது உரிமைப் போராட்டம் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு செய்தியை தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் விடுத்திருக்கின்றனர்.

உரிமைகள் மறுக்கப்படும்போது அமைதியாக இருக்கப்போவதில்லை என்ற அந்தச் செய்தி சர்வதேசத்தின், இலங்கை அரசின் காதுகளில் விழுமா? காலம் தான் பதில் கூற வேண்டும்.