January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானியாவில் ‘தமிழ் மரபுத் திங்கள்’ தொடர்பில் கலந்துரையாடல்

File Photo

தமிழ் மரபுத் திங்களுக்கான பிரித்தானிய அரச ஆணையை பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத் திங்கள் செயல்பாட்டுக் குழுவினருக்கும் இலண்டன் பெரும்பாக  நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையே கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மெய்நிகர் (ஸூம்)  ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது தமிழரின் மரபுத் திங்கள் நிகழ்வு கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் அதற்கான அரச ஆணை ஒன்றினைப்  பெறும் நோக்குடன்  கடந்த 3 வருடங்களாக தாம்  முன்னெடுத்து வருகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் பணிகள்  தொடர்பில் தமிழ் மரபுத் திங்கள் செயற்பாட்டுக் குழுவினர் விளக்கமளித்தனர்.

மேலும், குறித்த அரச ஆணை ஒன்றைப்  பெறுவதற்கு முன்னர்  பிரித்தானிய  நகராட்சி மன்றங்கள் தத்தமது நகராட்சிகளில்  தமிழ் மரபுத் திங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் தேவைப்பாடு ஏன்  என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது .

இந்தக் கலந்துடையாடலில், இணைந்த செயல்திட்டங்களுக்கான இணக்கப்பாட்டினை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர்.

தமிழ் மரபுத் திங்கள் செயல்திட்டத்தின் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்ல தமது  ஒத்துழைப்பினை வழங்குதுடன்,  குறித்த செயல்திட்டத்துக்கான அரச ஆணையை பெறும் வகையில் நகராட்சி மன்றங்களில் தீர்மானம் கொண்டுவரும் செயல்திட்டத்தில் தமிழ் மரபு செயற்பாட்டுக் குழுவினருடன் தாம் சார்ந்த கட்சி மற்றும்  அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.