January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடாவில் சுமந்திரன், சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைதியின்மை!

கனடா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோருக்கு எதிராக, புலம்பெயர் இலங்கையர்கள் குழுவொன்றினால் அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சுமந்திரன் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்றிருந்தது. அங்கு பல்வேறு தரப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் கனடாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்துகொண்டிருந்தார்.

இவர்கள் இருவரும் கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.

அதன்படி அங்குள் மண்டபமொன்றில் நடைபெற்ற கூட்டமொன்றில் இருவரும் கலந்துகொண்டிருந்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்தக் கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் எதிராக அந்த மண்டப பகுதியில் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அந்த இடத்திற்கு பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன்பின்னர் சுமந்திரனும், சாணக்கியனும் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.