January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா: நாசூக்காக காயை நகர்த்திய இந்தியா; அடுத்து நடக்கப்போவது என்ன?

-யோகி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஒருவாறாக நிறைவுக்கு வந்துவிட்டது. ஆனால் அது ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை.

இந்தக் கூட்டத்தொடரில், ‘இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னேற்றுதல்’ எனும் தலைப்பில் பிரித்தானியா உள்ளிட்ட 6 நாடுகள் இணை-அனுசரணையுடன் கொண்டு வந்திருந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும், நடுநிலையாக 14 நாடுகளும் வாக்குகளை வழங்கியிருந்தன.

இதனடிப்படையில் இந்தப் பிரேரணை தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் இருக்கப்போகின்றது.

தீர்மானம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனால் 2012இல் 24 நாடுகளும், 2013இல் 25 நாடுகளும், 2014இல் 23 நாடுகளும் இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவளித்திருந்தன.

அதாவது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்திருந்தன.

இந்தத் தடவை, அந்த எண்ணிக்கை 22 ஆக குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை குறைவு பிரித்தானியாவின் இராஜதந்திர ‘ஆளுமைப் பலவீனத்தை’ காண்பிக்கின்றதா? என்ற கேள்விக்கு அப்பால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரங்கானது உலக ஆதிக்க சக்திகளுக்கு பின்னால் அணிகளாகப் பிளவடைந்திருக்கின்றது என்பதையே புடம்போட்டுக் காட்டியுள்ளது.

இலங்கையின் முரண்நகை பிரதிபலிப்புக்கள்

அவ்வாறிருக்க, இந்த தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அது இலங்கையின் ‘இறைமையினை மீறுவதாக உள்ளது’ என்றும் ‘இத்தகைய தீர்மானத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் இலங்கையின் ஜெனிவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி சி.ஏ.சந்திரப்பெரும கூறியிருக்கின்றார்.

அதேபோன்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் சூட்டோடு சூடாக, தமது ஜெனிவாவுக்கான பிரதிநிதியின் கருத்தினை வலுப்படுத்தி ‘தீர்மானத்தினை நிராகரிக்கின்றோம்’ என்று கூறியிருக்கின்றார்கள்.

அதிலும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஒருபடி மேலேயே சென்றிருக்கின்றார். அவர், ’47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் பேரவையில், 24 நாடுகளின் ஆதரவினைப் பெற்றாலே அது பெரும்பான்மையாக அமையும்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

ஆனால் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு வெறும் 22 வாக்குகளே கிடைத்திருக்கின்றன’ என்று வாதிட்டுள்ளார்.

அத்துடன் நிறுத்திவிடாது, ‘பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகளும், நடுநிலையாக 14 வாக்குகளும் கிடைத்தமையால் தமக்குச் சாதகமாக 25 வாக்குகள் கிடைத்துள்ளன’ என்று அவருக்கு வசதியான பாணியில் கணக்குப் போட்டுள்ளார்.

அவருடைய கணக்கு ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதையே காட்டுக்கின்றது என்பது ஊர் மட்டுமல்ல உலகும் அறிந்த விடயம் தான்.

தமக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது ஏறக்குறைய ஓரிரு வாக்குகளின் வித்தியாசத்திலேயே வெற்றி நழுவிப்போகும் என்று கருதியிருந்தது இலங்கை அரசாங்கம்.

ஆரம்பத்தில் கூட்டத்தொடரை சாதாரணமாகக் கருதிய இலங்கை அரசாங்கம், உயர்ஸ்தானிகர் மிஷேல் பச்சலெட்டின் மீளாய்வு அறிக்கையையும் ஒரு பொருட்டாக கொண்டிருக்கவில்லை.

எனினும், அதன் பின்னர் வெளியான ‘பூச்சிய’ வரைவு முறைசாராக் கூட்டங்களில் மேம்படுத்தப்பட்டதை அடுத்து நிலைமையைப் புரிந்து கொண்டது இலங்கை அரசாங்கம்.

அதன்பின்னரே, ஜனாதிபதி கோட்டாபயவும், பிரதமர் மகிந்தவும் தொலைபேசி வாயிலாக ஒவ்வொரு நாடுகளாக தொடர்பு கொள்ள முனைந்தனர்.

வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே ரஷ்ய தூதரகத்தின் கதவினைத் தட்டினார். சோவியத் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு கோரினார்.

ஈற்றில் ரஷ்யாவால் உஸ்பெஸ்கிஸ்தானை மட்டுமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு தலையீடுகளைச் செய்வதற்கு இயலுமாக இருந்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இலங்கையின் இராஜதந்திரம் தோல்வி அடைந்துவிட்டது. மூலோபய நகர்வுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன என்பது தான் யதார்த்தமாகின்றது.

ஆனாலும் இந்த யார்த்தத்தினை ஏற்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. அதனாலேயே, ‘மேற்குலகின் இலங்கை மீதான தீர்மானம் சில நாடுகளின் தேவைக்காக கொண்டுவரப்பட்டது, ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது’ என்று அரசு கூறுகின்றது.

பின்னர் ‘அவ்வாறு தோல்வி அடைந்த தீர்மானத்தினை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம்’ கூறுகின்றது.

இவ்வாறான முன்னுக்குப் பின் முரண்நகையான பிரதிபலிப்பு வேடிக்கை என்பதை விட பின்னடைவுகளால் ஏற்பட்டுள்ள பதற்றமே.

சர்வதேச அரங்கில் காயை நகர்த்திய இந்தியா

இது இவ்வாறிருக்க, இந்த தீர்மான நிறைவேற்றத்தில் தாயக, தமிழக, புலம்பெயர் தமிழர்களால் பெரிதும் கரிசணைக்கு உட்படுத்தப்பட்ட விடயம் ‘இந்தியா என்ன செய்யப்போகின்றது’ என்பதேயாகும்.

முன்னதாக, நகல் பிரேரணை கொண்டுவரப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, ‘இந்தியாவின் திரைமறைவு’ நகர்வுகளாலேயே 13ஆவது திருத்தச்சட்டத்தினை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மாகாண சபை அலகுகளுக்கான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டன.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னதாக உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, ’13ஆவது திருத்தச்சட்டம் உறுதிப்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் ‘இலங்கையில் அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதோடு இலங்கைத் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதி ஆகியவற்றோடு இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதி செய்வதிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும்’ இந்தியா தெரிவித்துள்ளது.

இவை, இராஜதந்திர மொழிகளாக இருந்தாலும், முதற்தடவையாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இந்தியா மௌனம் கலைத்து இலங்கை மீது சற்றே காட்டமான தொனியை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலைமைக்கும் இலங்கையே காரணம்

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பேரில் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

மறுபக்கத்தில் ‘சீனச் சார்பு’ நிலைப்பாட்டை எடுத்திருப்பதைக் காட்டும்படியாக, இந்தியாவின் தென்கோடியை அண்மிக்கும் வகையில் ‘சீன பிரசன்னத்திற்கு’ இலங்கை அரசாங்கம் இடமளித்துள்ளது.

வடக்கில் மூன்று தீவுகளை மின்சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு சீனாவுக்கு ஆசிய அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வழங்கிவிட்டது இலங்கை.

அதற்கு முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவுக்கு வழங்க செய்துகொண்ட ஒப்பந்தத்தினையும் மதிக்காது மீளப்பெற்றுக் கொண்டது.

இவ்விதமான நிலைமைகள், அண்மைய நாட்களில் இலங்கை- இந்திய உறவில் ‘கீறல்களை’ ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தியாவுக்கு அதன் தேசியப் பாதுகாப்புக்காகவும், பிராந்தியத்தில் தலைமை நாடு என்ற அந்தஸ்துக்காகவும், அயல்நாடும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான இலங்கையை தனது ‘பிடிக்குள்’ வைத்திருக்க வேண்டிய கௌரவத் தேவை உள்ளது.

ஆகவே, இலங்கை விவகாரத்தில் தலையீடுகளைச் செய்து உள்நாட்டில் அழுத்தங்களை அளித்து வேண்டாத பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துவதிலும் பார்க்க, சர்வதேசத் தளத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் இலங்கை மீதான தனது பிடியை நிலைநிறுத்தும் வகையில் ’13ஆவது திருத்தச்சட்டம், மாகாண சபை முறைமை’ ஆகிய விடயங்களை புகுத்தியுள்ளது.

தீர்மானத்தினுள் உள்ளீர்க்கப்பட்ட விடயங்கள் இந்தியாவின் நலன் சார்ந்ததாக அமைந்தாலும் சர்வதேச அரங்கில், இலங்கையில் இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியுள்ளது.

சர்வதேச ஒப்பந்தமான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, அதன் வழியாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை ஜனநாயக முறைமையின் கீழ் முன்னெடுப்பதற்கு தயங்குகின்றது என்ற விடயங்களை முழு சர்வதேச நாடுகளுக்கும் காண்பிப்பதாக உள்ளன.

எனவே இந்த விடயம் சர்வதேசத் தளத்தில் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கு வழிசமைப்பதோடு மட்டுமல்லாது, தமிழர்கள் சர்வதேசத்தினை நோக்கி முன்வைக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும்.

அதற்கு ஓரளவேனும் செவிசாய்ப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

அதேநேரம், தற்போதைய நிலையில் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தீர்வாக தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியையும் சர்வதேச தளத்தில் வைத்து இந்தியா சொல்லாமல் சொல்லியிருக்கின்றது என்ற பார்வையொன்றும் இல்லாமலில்லை.

முன்னேற்றமான தீர்மானம்?

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட மிகவும் வலுவான தீர்மானமாக இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்குச் சார்பான சிவில், புலம்பெயர் அமைப்புக்களும் கூறுகின்றன.

பூகோள சூழலுக்கு அமைவாகவும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு காணப்படும் அதிகாரத்திற்கு அமைவாகவும் அதியுச்சமான விடயங்களை உள்ளடக்கியதாக இத்தீர்மானம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் இந்த தீர்மானம் மலினப்படுத்தப்பட்டதொன்றாகவும், பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே முடக்கி அரசாங்கத்திற்கு மீண்டுமொரு தடவை கால அவகாசத்தினை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளன.

எனினும், இந்தத் தீர்மானத்தில் உள்ள செயற்பாட்டு பந்தி 6-இல், சாட்சியங்களை மேலும் திரட்டுதல் மற்றும் அதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல், அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தல் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதுவொரு முக்கியமான திருப்பம் என்கிறது கூட்டமைப்பு.

ஆனாலும் 2015ஆம் ஆண்டு தீர்மானம் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்க வேண்டுமென முன்மொழிந்திருந்தது.

ஆனால் இந்தத் தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்திடமே விட்டுவிடுகின்றது. இது உள்நாட்டு பொறிமுறையாகவே உள்ளதாக கஜேந்திரகுமார் அணியும், விக்னேஸ்வரன் அணியும் கூறுகின்றன.

ஆக, தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அடிப்படையாக் கொண்டு தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் தரப்புக்கள் அடுத்த இரண்டு வருடத்திற்கு பரஸ்பரம் பழிச்சொற்களையும், முட்டிமோதல்களையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப்போகின்றன.

ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கை, பெட்ரி அறிக்கை எனப்படும் உள்ளக ஆய்வறிக்கை, இலங்கை தொடர்பான மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கை ஆகியவற்றில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான பரிந்துரைகள் காணப்படுகின்றன.

அதேபோன்று, ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் உயர்ஸ்தனிகர்கள் நால்வரும், இலங்கைக்கு விஜயம் செய்த முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் 13பேரும், இலங்கை தொடர்பான ஐ.நா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற மூன்று உறுப்பினர்களும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு பரிந்துரைத்திருக்கின்றார்கள்.

தற்போதைய உயர்ஸ்தானிகரான மிஷேல் பச்சலெட்டும் தனது மீளாய்வு அறிக்கை, மற்றும் உரைகளின்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விடயத்தினை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அவ்விதமாக பார்க்கையில், தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்த நீதியை நிலைநாட்டுவதாக இல்லை என்ற விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்படுகின்றது.

இனி நடக்கப்போவது…

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அடியொற்றி அடுத்ததாக இனி என்ன நடைபெறப்போகின்றது என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழு அளவில் பயன்படுத்தி தென்னிலங்கையில் சிங்கள, தேசிய, பௌத்தவாதத்தினை வலுப்படுத்துவதற்கும், வாக்கு வங்கியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ‘பூச்சாண்டிக் கதைகளை’ தொடர்ந்து கொண்டிருக்கும்.

அதேபோன்று, ஐ.நா.கட்டமைப்புக்களுடன் தீர்மானத்தின் பங்குதாரர்கள் தீர்மானத்தில் காணப்படும் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்களை முன்னெடுப்பார்கள்.

எனினும் இலங்கை அரசாங்கம் ‘இறைமையை’ முன்னிலைப்படுத்தி தடைகளையும் தவிர்ப்புக்களையும் செய்வதற்கு முயலக்கூடும்.

இதனைவிடவும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளோரை மையப்படுத்தி வழக்குகளை தொடர்ந்து பயணத்தடைகள், சொத்துக்கள் முடக்கல் போன்ற செயற்பாடுகளை எடுப்பதற்கு முனையலாம்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் 6 மாதங்களுக்கு ஒருதடவை மீளாய்வு சமர்ப்பணங்களை வாய்மொழி, எழுத்துமொழி மூலமாக செய்யவேண்டி இருப்பதால் அதற்கான தரவுகள், தகவல்கள் சேமிப்பில் அதீதமாக கரிசனைகொள்ளும்.

அதேநேரம் மிக முக்கியமாக, புதிய தீர்மானத்தின் செயற்பாட்டு பந்தி 6-க்கு அமைவாக, ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அலுவலகம் சாட்சியங்களை திரட்டுவதற்காக இலங்கையில் மேலும் 12 அதிகாரிகளை பணியில் அமர்த்தவுள்ளது.

சர்வதேசக் குற்றவியல் நீதி தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட ஆலோசகர்கள், விசாரணையாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

இந்தச் செயற்பாட்டிற்காக ஒதுக்கப்படும் 2.8மில்லியன் டொலர் நிதியை வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

சாட்சியங்களை திரட்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதும் ஐ.நா.அதிகாரிகள் இலங்கையினுள் பிரவேசிப்பதற்கான அனுமதியைக் கோரலாம்.

அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள்.

அதேநேரம், உள்நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பில் உள்ள நேரடி சாட்சியங்களுக்கான அச்சுறுத்தல்கள், அதேபோன்று தரவுகள், தகவல்கள் பரிமாற்றப்படுவதை கண்காணிக்கும், ஒட்டுக்கேட்கும், முடக்கும் செயற்பாடுகள் தாராளமாக முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சமும் இல்லாமல் இல்லை.

இதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் விசேட சட்ட ஏற்பாடுகள் கூட வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆக மொத்தத்தில் தீர்மானத்தின் பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் பலத்த சவால்களுக்கு மத்தியில் தான் நடைபெறவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கும் போராட வேண்டிய நிலைமைக்குள்ளே தொடர்ந்தும் இருக்கப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.