ஐநா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கை மீதான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் பிரிட்டன் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது.
எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தப் பிரேரணை அன்றைய தினம் அல்லது மறுநாள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை உறுதி செய்தல் பிரிட்டிஷ் அரசுக்கு உள்ள கடப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களான சிபொன் மக்டொனா (தொழிற்கட்சி), எலியொட் கோல்பர்ன் (கொன்சர்வேட்டிவ் கட்சி), எட்வர்ட் டேவி (லிபரல் டிமோகிரட்ஸ் கட்சி) ஆகியோரின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட இந்த விவாதத்தில் பல எம்.பி. க்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பிரிட்டிஷ் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த விவாதத்தில், ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை மீதான தீர்மானம் மேலும் உறுதியானதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.
“மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து நீதி வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தையே கோருவதாக பிரிட்டிஷ் அரசு முன்வைக்கும் வாதம் நடைமுறைக்கு பொருத்தமற்ற செயல்…” என்று சிபொன் மக்டொனா எம்.பி. தெரிவித்தார்.
“இப்போது உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான சாத்தியம் இலங்கையில் இல்லை. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஆதரிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசு இந்த விவகாரத்தில் உலகளாவிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்…”எலியொட் கோல்பர்ன் (கொன்சர்வேட்டிவ் கட்சி) கூறினார்.
முக்கிய உரைகளில் சில…