January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 நாட்களே நீடித்த “ஒற்றுமை”: பிளவுபட்டு நிற்கும் தமிழ்த் தேசிய அணிகள் சாதிக்கப் போவது என்ன?

யோகி

இலங்கையில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ‘ஒன்றுபட்டு விட்டன’ என்ற கோசம் எழுந்து இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன. அந்தக் கோசம் அடங்குவதற்கு முன்னரே அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பது போல் அந்த ‘ஒற்றுமை’ கேள்விக் குறியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரினை எதிர்கொள்வதற்காக மூன்று சுற்றுப் பேச்சுக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய அணிகள் ஒன்றுபட்டிருந்தன.

அதன்படி, ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் அதன் ஆணையாளர், ஐநா தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்களுக்கு மூன்று அணிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான பொது ஆவணத்தில் கையொப்பமிட்டு கடந்த 15ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தன.

இந்த நிகழ்வு வடக்கு கிழக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் பெருமளவில் பேசப்பட்டன. தென்னிலங்கையில் இந்த நிகழ்வு சற்றே அதிர்ச்சியை அளித்திருந்தது; பிரித்தாளும் தந்திரத்தினைக் கொண்ட சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு இது பேரிடியாகவே இருந்தது.

அதன், வெளிப்பாட்டை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹோகித்த போகொல்லாகம செய்திருந்தார். ‘தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஐநா மனித உரிமைகள் பேரவையை கையாள எடுத்துள்ள முடிவையும் அவர்கள் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தினையும் விளையாட்டாகக் கருத வேண்டாம்’ என்று எச்சரித்திருந்தார்.

ஆனால், தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள மூன்று அணிகளினதும் ஐக்கியம் என்பது வெறுமனே 15 நாட்கள் தான் நீடித்திருக்கின்றன. அதாவது கடந்த 9ஆம் திகதி ஜெனீவா விடயத்தில் ஏற்பட்ட இணக்கம் கடந்த 24 ஆம் திகதி தமிழரின் வாழ்விடப் பிரதேசங்கள் தொடர்பான விடயத்தில் கேள்விக்குறி நிலைக்கு வந்துள்ளது.

கடந்த வாரத்தில், வடமாகாணத்தில் அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.

18 ஆம் திகதி முல்லைத்தீவில் புராதன ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள், காணிகள் உள்ளடங்கிய குமுளமுனை, தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை மற்றும் மணலாறு, படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜகத் ரத்நாயக ஆகியோரின் பங்கேற்பில் குருந்தூர் மலையிலும், படலைக்கல்லுவிலும் இந்த அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, 19ஆம் திகதி புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி பணிகளை முன்னெடுத்தனர்.

சிவில் உடையில் இராணுவத்தினர் கிடங்குகளை வெட்டும் பணியை முன்னெடுத்தபோது பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த தொல்லியல் திணைக்கள அதிகாரி மேற்பார்வை செய்தார்.

இதன் நீட்சியாக, 23ஆம் திகதி சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணியை அண்மித்துள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களிடத்தில் கேள்விகளைத் தொடுத்ததோடு புகைப்படங்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

சிவாஜிலிங்கத்தின் அழைப்பு

இந்த சம்பவங்களால் தமிழ் மக்களும், சிவில் அமைப்புக்களும், 2019 இல் நாவற்குழி பௌத்த விகாரையை அமைக்கும்போது காட்டிய எதிர்ப்பையும் விட ஒருபடி மேலேசென்று எதிர்ப்புக்களை வெளியிட்டதோடு மட்டுமன்றி தொல்பொருள் ஆய்வின் பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த விடயங்களை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை  வெளிப்படுத்தியிருந்தனர்.

பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்தாலோசனைகள், தாயகத்திற்கும் புலம்பெயர் தரப்பினருக்கும் இடையிலான இணையவழி கலந்தாய்வுகள் எல்லாம் தொடர்ந்து நடைபெறலாயின. பலதளங்களில் ஏற்பட்ட அழுத்தங்கள் முன்னேற்றத்தினை ஏற்படுத்தின.

இந்தப் பின்னணியின் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் தாயகத்தில் ‘தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்’ என்ற முனைப்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

‘தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் ஒட்டுமொத்த இனமும் எதிர்கொண்டிருக்கும் ஆபத்தினை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்காக’ 24ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஒருங்கிணையுமாறு கோரினார்.

தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள பிரதான மூன்று கூட்டுக்களில் உள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறான அழைப்புக்கள் தனித்தனியாக சென்றிருக்கின்றன.

அதனை சிவாஜிலிங்கம் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்நிலையில் குறித்த தினமன்று கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

விக்னேஸ்வரன் ‘உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம்’ என்று வலியுறுத்தினார்.

மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உள்நாட்டில் உள்ள தொல்பொருள், காணி விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்ளீர்க்க வேண்டும் என்றும் அவர்களை மையப்படுத்திய குழுவொன்று அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்விதமான பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழர் மரபுரிமைகள் பேரவையினால் முல்லைத்தீவு மாவட்டத்தினை மட்டும் மையப்படுத்தியதாக தயாரிக்கப்பட்ட ‘காணி அபகரிப்பு மற்றும் தமிழர் தொல்பொருள் பிரதேசங்களை மையப்படுத்திய ஆவணத்தினை’ தவிர வடக்கு-கிழக்கினை மையப்படுத்தி இதுவரையில் முறையான எழுத்துவடிவ ஆவணம் தமிழர் தரப்பில் இல்லை என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் நிறைவடைந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிவாஜலிங்கம், “தொல்பொருள், காணி அபகரிப்பு விடயத்தில் ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல்தரப்புக்களும் இணங்கியுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி?

அதனடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் தலா இருவரை உள்ளீர்த்த குழு ஒன்று அமையவுள்ளது. அதற்கான பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் வரும் நாட்களில் முன்மொழியும்” என்று சாரம்சத்தை கூறினார்.

அத்துடன் தன் முயற்சியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சி அவரின் மலர்ந்த முகத்தில் தெரிந்தபோதும் ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் எவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லையே’ என்ற கேள்வி அவரை இறுக்கமடையச் செய்தது.

அதற்கு அவர் பதிலளிக்கத் தயங்கவில்லை. ‘முன்னணியின் தலைவருக்கு அழைப்பு எடுத்தேன், பதிலளிக்கவில்லை. செயலாளருக்கு அழைப்பு எடுத்தேன், பதிலளிக்கவில்லை. சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸுக்கு அழைப்பெடுத்தேன், தான் வெளி மாவட்டத்தில் இருக்கின்றேன்’ என்று கூறினார்.

‘அவரிடத்தில் விடயத்தினை தெளிவுபடுத்தி அவர்கள் தரப்பிலிருந்து யாராவது பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்றும் கோரினேன்’ என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய யாழ். மாநகர மேயர் வி. மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தார். அவருடைய அணியில் ஒருசிலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

‘மணி அணி வந்தமையால் தான் முன்னணி வரவில்லை’ என்ற பேச்சும் இளைங்கலைஞர் மண்டபத்தில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் அரசல் புரசலாக இருந்தததாகவும் தகவல்.

எப்படியோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ‘தமிழர்களின் வாழ்வுரிமை’ விடயத்தில் ஏனைய தரப்புக்களுடன் ஐக்கியப்படவில்லை என்பது பேசுபொருளாகிவிட்டது.

அதுமட்டுமன்றி, சிங்கள, பௌத்த தேசியவாதம் கடந்த காலத்தினை போலன்றி, அரச இயந்திரத்தின் ஆதரவுடன் முழுவீச்சில் செயற்படும் தருணத்தில் அதனை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முகங்கொடுப்பதே பொருத்தமானது.

தமிழ்த் தரப்புக்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருப்பதால் நன்மை அடையப்போவது என்னவோ பேரினவாதம் தான். இதனைப் புரியாது ‘கஜேந்திரகுமார் குழப்புகின்றார்’ என்ற வாதங்கள் பல மட்டங்களில் இளங்கலைஞர் மண்டபக் கூட்டம் நடைபெற்று சொற்ப நேரத்திற்குள்ளேயே வெகுவாக வலுத்திருந்தது.

அதுமட்டுமன்றி, இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காமையானது, அக்கட்சிக்கு மணிவண்ணன் வெளியேற்றத்தின்போது ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை விடவும் ஒருபடி மேல் தான் காணப்பட்டது என்பதே வெளிப்படையானது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆணையளித்த சாதாரண மக்கள் மத்தியிலும், ‘கஜேந்திரகுமார் ஏன் பங்கேற்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ இந்த விடயத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். எமது பிரச்சனையில் கூட முரண்பட்டு நிற்கின்றாரே’ என்ற நிலைப்பாடுகள் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது விட்டமைக்கான காரணம் என்ன? என்பதற்கான தர்க்க ரீதியான பதிலை அந்தக் கட்சியே வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது, ‘ஐக்கியப்படுதல் என்பது கொள்கை அடிப்படையிலானது’ என்பதே முதல் வாதமாக உள்ளது.

‘மக்களின் முக்கியமான பிரச்சனைகள் என்ற அடிப்படையில்’ ஒன்றுபடுவதில் கொள்கை முரணாக இருக்காது அல்லவா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. ஆனால் அதற்கும் அவ்வணி கேள்வியுடன் பதிலளிக்கின்றது.

‘கொள்கைக்கு முரணாக செயற்படவில்லை’

“ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடந்த வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. காணி, தொல்பொருள் பெயரால் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களுக்கு படைகளே காரணமாகின்றது. ஆகக்குறைந்தது அந்த படைகளுக்கான ஒதுக்கீட்டையாவது எதிர்த்திருக்கலாம்.

ஆனால் விக்னேஸ்வரன் அதனையும் எதிர்க்காது பாராளுமன்றுக்கே சமூகமளிக்காமலே இருந்துள்ளார். இத்தகைய அணியில் உள்ள சிவாஜிலிங்கம் போன்றவர்கள் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் நாம் எவ்வாறு பங்கேற்க முடியும்”  என்பதே அப்பதிலாகும்.

அதுமட்டுமன்றி, ‘ஜனாதிபதி தேர்தலில், பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து பொது நிபந்தனைகளை விதிப்பதற்காக முனைந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வினைக் காண்பதற்கான மைத்திரி- ரணில் அரசின் அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டவர்கள்’ என்றும் அவ்வணி சுட்டிக்காட்டுகின்றது.

எனினும், ஐநா விடயத்தில் நீங்கள் சிவாஜிலிங்கம், கூட்டமைப்பு அங்கத்தவர்கள் உள்ளிட்டவர்களுடன் ஒன்றிணைந்திருந்தீர்களே என்று கேட்டபோது, ‘நாங்கள் அவர்களுடன் இணையவில்லை. 2012ஆம் ஆண்டிலிருந்து நாம் என்ன கூறிவந்தோமோ அதுவே நடைபெற்றிருக்கின்றது.

அதாவது, பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐநா மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை என்றோம். அதனையே அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு பொது ஆவணத்தில் பொறுப்புக்கூறலை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான பரிந்துரையைச் செய்துள்ளன.

ஆகவே எந்தவொரு கட்டத்திலும் நாம் கொள்கைக்கு முரணாக செயற்படவில்லை. மேலும், அந்தக் கூட்டங்களை இத்தகைய தனி நபர்கள் முன்னெடுக்கவில்லை. சிவில் அமைப்பின் பிரதிநிதிகளே எம்மை தொடர்பு கொண்டு அச்செயற்பாட்டிற்கு அழைத்திருந்தினர்’ என்றும் அவ்வணி குறிப்பிட்டுள்ளது.

தர்க்க ரீதியாக தமிழ்த் தேசிய முன்னணி இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தாலும், மட்டக்களப்பு, மாதவனை, மயிலத்தமடு பிரச்சனையில் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஷவைச் சந்திப்பது முதல் அதற்கடுத்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் வரை தற்போது ஒன்றுபட முடியாது என்றுரைக்கும் தரப்புக்களுடன் இணைந்தே செயற்பட்டிருந்தது என்பது அண்மைய உதாரணமாகின்றது.

அதனடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தர்க்க ரீதியான வாதம் முரண்நகையாக இருக்கின்றது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை பெறுவது என்ற நீண்ட பயணம் தற்போது வரையில் நிறைவடையவில்லை. அது இன்னும் இழுபறியாகவே தொடரும் என்பதை  சமகால ஆட்சியாளர்களின் வெளிப்பாடுகளில் இருந்து உணர முடிகின்றது.

ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் ‘திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகள் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் தற்போது முழு வீச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கையை பலவீனமாக்குவதாக இருந்தால் தீர்வைக் கோரும் சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதே பேரினவாதிகளின் திட்டமாக இருக்கின்றது.

கொள்கை முரண்பாடு என்ற காரணத்தைக் காட்டி எல்லா விடயங்களிலும் ‘தீட்டுப் பார்த்துக்கொண்டிருக்காமல்’,  சொந்த அரசியல் நலன்களை தக்கவைப்பதற்காகவோ – ‘இழந்த செல்வாக்கை’ மீட்பதற்காகவோ சூட்சும அரசியலில் ஈடுபடாமல் அரசியல்வாதிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணரவேண்டும்.