January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னையில் நவம்பர் 21 ஆம் திகதி 67 ,378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 61,843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 400 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட புதிய நீர்த்தேக்கத்தை அவர் அர்ப்பணிக்க உள்ளார்.

தமிழகத்தில் மேலும் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்ட இருக்கிறார் .

ஆயிரத்து 620 கோடி ரூபாயில் கோவை அவிநாசியில் உயர்மட்ட சாலை திட்டம் ,கரூர் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம் என உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் .

சென்னை வல்லூரில் 900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டும் அதேவேளை, காமராஜர் துறைமுகத்தில் 900 கோடியில் புதிய இறங்குதளம் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் மேற்கொள்கிறார்.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை என்பது பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

திடீரென புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தமிழகத்தில் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது .