January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் வெற்றிக் கொண்டாட்டம்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் வெற்றியை அடுத்து அவரின் பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமம் வெற்றிக் கொண்டாட்டத்தில் களைகட்டியுள்ளது.

பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை அந்த கிராம மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா கோபாலன் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
கோபாலனின் குடும்பத்தினர் 90 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அக்ரஹார தெருவில் வாழ்ந்திருக்கின்றனர்.அவரின் மூத்த மகள் தான் கமலா ஹாரிஸின் தாயான சியாமளா.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற சியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த டொனால்ட் ஜே ஹாரிசை திருமணம் செய்திருக்கிறார்.அங்கு பிறந்து வளர்ந்த கமலா ஹாரிஸ் பொருளாதாரம் ,சட்டம், அரசியல் என பல துறைகளில் பட்டம் பெற்றவர்.

செனட் சபை உறுப்பினர், கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் என படிப்படியாக உயர்ந்து தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் வசித்தாலும் துளசேந்திரபுரம் கிராமத்துக்கும் அவருக்கும் இடையிலான தொடர்பு தற்போது வரை இருக்கிறது.இவர்களின் பூர்வீக குலதெய்வக் கோவில் இங்கு இருப்பதால் இவர்களின் பந்தம் இன்றும் இந்த கிராமத்தில் தொடர்கிறது.

2014 ஆம் ஆண்டு அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு நன்கொடை கொடுத்ததை இங்குள்ள கல்வெட்டில் மூலம் அறிய முடிகிறது.
அந்தக் கோவில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து இந்த ஊர் மக்கள் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கி வீடுகளின் முன்பு வாழ்த்து கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.