November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமான முறையில் இலங்கை அழைத்துச் செல்ல முயற்சித்த பெண் உட்பட 4 மீனவர்கள் கைது

Fishery Boats Common Image

தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் இருந்து நேற்றைய தினம் (06) நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில், மீனவர்கள் முதலாவது மணல் திட்டில் ஒரு பெண் தனியாக நிற்பதை பார்த்து மெரைன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில் மணல் திட்டில் ரோந்து படகில் சென்ற மெரைன் பொலிஸார் பெண்ணை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததில் அந்த பெண் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் உள்ள அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்த அந்த பெண், ராமேஸ்வரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகில் செல்ல முடிவு செய்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த குறித்த பெண் தனுஷ்கோடியை சேர்ந்த முனீஸ்வரனிடம் இலங்கைக்கு செல்ல படகு கட்டணமாக ரூபாய் 30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண்ணை ஏற்றிச் சென்ற படகோட்டிகள் நீண்ட நேரம் கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்து விட்டதாக தெரிவித்து தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணை கைது செய்த மெரைன் பொலிஸார் இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மீனவர், படகில் ஏற்றி சென்றவர் மற்றும் சின்ன பாலத்தை சேர்ந்த மீனவ பெண் மற்றும் இலங்கை பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தியுள்ளனர்.