கடந்த சில மணி நேரத்தில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிவர் புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது 16 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் மூடப்பட்டுள்ளது .
இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிவர் தீவிர புயலாக உருவாகி உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
அத்துடன் சென்னை மற்றும் புதுச்சேரியில் புயல், வெள்ளம் காரணமாக நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் மெரினா பீச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது .சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து சென்னை வரும் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது . சென்னையின் முக்கிய பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளதால் தற்போது சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
பலத்த மழை ,சூறாவளி காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் சென்னையின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் 7 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது . இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. தற்போது படகுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளி மாவட்ட மக்கள் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது.