November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சி ஆசனங்களுக்காக திமுகவிடம் பேரம் பேசமாட்டோம்; தினேஷ் குண்டுராவ்

காங்கிரஸ் கட்சி, ஆசனங்கள் தொடர்பில் திமுகவுடன் பேரம் பேசப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டு ராவ் தொடர்ந்தும் குறிப்பிட்டதாவது;

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளையும் வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது என்றார்.

மேலும், நாங்கள் அதை முக்கியமான நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள யதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விடயங்களை விடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.

பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம் என்று குண்டு ராவ் தெரிவித்தார்.

அத்தோடு வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிக்கரமாக இருப்போம்.

யதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும்.நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம்.தேவையற்ற பேரங்கள் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 41 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 8 இடங்களை மட்டுமே   கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.