மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவரை சந்திக்க வந்திருந்த இயக்க நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களின் நிர்வாகிகள் விஜயின் பனையூர் இல்லத்தில் முன்பாக கூடியிருந்தனர்.
எனினும் இந்த கூட்டத்திற்கு வெகுநேரமாகியும் விஜய் வரவில்லை. இறுதியில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் காத்திருந்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்து சென்றனர்.
தற்போது மாஸ்டர் பட வெளியீட்டுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி ஒன்றை பதிவு செய்தார்.
இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜயின் தாயார் ஷோபா ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து தனது மன்ற நிர்வாகிகளுக்கு தந்தையின் கட்சியில் இணைய வேண்டாம் எனவும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டாமெனவும் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பின்னர் அக்கட்சியில் இணையமாட்டோம் என மதுரை மக்கள் இயக்கத்தினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் தனது வீட்டில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.