January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரிக்கின்றன; ராமதாஸ்

தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ், இதன் காரணமாக பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கே இன்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கைக் கடற்படையினர்,அவர்களை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று இன்று நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 மீனவர்களை பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;

“நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கொரோனா காரணமாக சில மாதங்களாகக் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக் கடற்படையின் அத்துமீறலும் அட்டூழியங்களும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டதால் ஏற்பட்ட பதற்றம் தணியும் முன்பே மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.