தீபாவளிக்கு விருந்து படைக்கும் வகையில் தயாராகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல.
இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் வெளியாகும் முதல் படம் மூக்குத்தி அம்மன்.
அதிலும் லேடி சூப்பஸ்டார் நயன்தாரா படம் என்றால் வேறு எதுவும் கூறத் தேவையில்லை. ஆனால், தற்போது ரசிகர்களுக்கு கவலை ஏற்படுத்தும் செய்திதான் மூக்குத்தி அம்மன் படம் மீது தடைகோரும் புகார்.
சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மக்களை மகிழ்விக்க வரும் திரைப்படங்கள் இவ்வாறான சோதனைகளை கடந்து, சாதனைகள் படைத்திருக்கின்றன.
பக்தி கலந்த காமெடி மற்றும் ஆழமான கருத்துக்களை தெறிக்கவிடும் திரைப்படமான மூக்குத்தி அம்மன் வரும் தீபாவளியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருந்தது.
ஆனால் இந்தப் படம் மீது வந்துள்ள புகார் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது படம் குறித்த நேரத்தில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார்.