photo: facebook /DMK
பாஜகவினர் கலந்துகொள்ளும் ஊடக விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்போர் தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பதாகவும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாலும் விவாதங்களின் தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
மேலும் மத்தியில் பிஜேபியும் மாநிலத்தில் அதன் தோழமைக் கட்சியான அதிமுகவும் இருப்பதால் நடுநிலையாக செயல்பட முடியாமல் சேனல்கள் கையறு நிலையில் உள்ளன.ஆகையால் இனி வரும் காலங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளை சார்ந்தவர்களும் பாஜகவினர் கலந்துகொள்ளும் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
இதை இவ்வாறு அனுமதிப்பது தமிழகத்தின் அரசியல் சூழலைப் பாழ்படுத்திவிடும் என அஞ்சுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த முடிவு பாஜகவினரை தனிமைப் படுத்துவதாக ஒருபுறமிருந்தாலும் பாஜகவினர் கூறும் கருத்துக்கு எதிர்க் கருத்தை பதிவு செய்ய முடியாமல் போகும் நிலைமையை உருவாக்கும்.
தமிழக ஊடகங்களில் அரசியல் விவாதமென்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.இன்று அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் இந்த நிலைப்பாடு எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய எதிர்க்கட்சி இல்லாமல் ஊடகங்கள் எவ்வாறு இந்த நிலைமை சமாளிக்க போகிறார்கள் என்பது இன்னொரு புறம் உள்ள சவாலாகும்.
எதுவானாலும் எதையும் சமாளித்துக் கொண்டு கருத்துக்களை முன்வைப்பவர்கள் தமிழக அரசியல்வாதிகள்.இருந்த போதிலும் இதில் யாரை தவிர்த்து யாரை விவாதத்திற்கு அழைப்பது என தற்போது ஊடகங்களுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.