File Photo: Wikipedia
”விஜய் மக்கள் இயக்கத்தை எனக்கு தேவை என்பதால் கட்சியாக மாற்றுகிறேன்” என்று நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்தரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்க தொண்டர்களுக்கு உற்சாகம், அங்கீகாரம் தருவதற்காக இந்தக் கட்சியை தொடங்குகிறேன் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
புதிய கட்சி தொடங்கியது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையகத்தில் சந்தரசேகர் நேற்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
மேலும் இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் சின்னம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து நடிகர் விஜய் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சிக்கு எனது பெயரையோ புகைப்படத்தையோ உபயோகித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தந்தை மற்றும் மகன் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லையா? என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்விகள் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், 1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக ஆரம்பித்த ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி மக்கள் இயக்கமாக மாறியதாக சுட்டிக்காட்டினர்.
அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியைப் பதிவு செய்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது விஜயின் பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது கிடையாது என்றும், ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதனை கட்சியாக பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கட்சி ஆரம்பிக்க இப்போது என்ன அவசியம்? யாருக்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தீர்கள்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் கட்சி ஆரம்பித்த அவசியம் என்ன என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. ஒவ்வொருவராக தனித்து பேட்டி எடுக்க வாருங்கள் அப்போது சொல்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை” என்றார்.