November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேம்படுத்தப்பட்ட பினாகா பல்குழல் ரொக்கட்களை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

இந்தியா தனது மேம்படுத்தப்பட்ட பினாக்கா பல்குழல் ரொக்கட்டினை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு இந்த பினாக்கா பல்குழல் ரொக்கட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை உருவாக்கியுள்ளது.

அறுபது முதல் 90 கிலோமீற்றர் செல்லக்கூடிய இந்த பல்குழல் ரொக்கட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை இந்திய இராணுவம் பயன்படுத்தவுள்ளது.

ஒடிசாவின் சந்திபூரில் இடம்பெற்ற இந்த பரிசோதனையின் போது
குறுகிய நிமிடத்திற்குள் ஆறு ரொக்கட்கள் ஏவப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டன என இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள பினாகா எம்கே ரொக்கட் 36 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடியது. எனினும் புதிய ரொக்கட் 60 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடியது.இது இந்திய இராணுவத்தின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு,தொலைதூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கவேண்டிய முக்கிய தேவையை இந்த ரொக்கட்கள் பூர்த்தி செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் காணப்படும் சீன இராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் அதிகாரி, அந்த பகுதியில் சீனா தனது ஆட்லறி பீரங்கிகளின் உதவிக்காக பல ரொக்கட்களை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.