January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் விஜயகாந்த காலமானார்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானதாக மியாட் மருத்துவமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் 26ஆம் திகதி தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருக்கும் விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தி கடந்த 11-ஆம் தேதி வீடு திரும்பினார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார்.
செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் மருத்துவமனை சென்ற விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மியாட் மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1979ம் ஆண்டு “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1980-ல் வெளியான “தூரத்து இடி முழக்கம்” மற்றும் 1981-ல் வெளியான “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார் . திரைப்படங்கள் மூலம், கிராமப்புறங்களில் விஜயகாந்துக்கு இருந்த ஆதரவின் காரணமாக அவர் கருப்பு எம் ஜி ஆர் என்று அழைக்கப்பட்டார். இந்த ஆதரவே, அரசியலில் அவரது ஆரம்ப கால வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது.
1991ம் ஆண்டு வெளியான “கேப்டன் பிரபாகரன்” என்ற திரைப்படத்தின் வெற்றியே, அவருக்கு கேப்டன் என்ற பட்டத்தை பெற்று தந்தது. 1992-ல் வெளியான “சின்ன கவுண்டர்” திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படமாகும்.

அவருக்கு 2001ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. 2002-ல் வெளியான “ரமணா” திரைப்படத்துக்காக தமிழ்நாடு அரசு திரைப்பட விருது பெற்றார்.
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தூரத்து இடி முழக்கம்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘உழவன் மகன்’, ‘சிவப்பு மல்லி’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவரானார் விஜயகாந்த்.

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவன் மகன்’, ‘கேப்டன் பிரபாகரன்’,’வானத்தைப் போல’, ‘தவசி’, ‘ரமணா’ என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தின் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கினார்கள். அவை பெரும்பாலும் வசூலைக் குவித்தன.

இதேவேளை அரசியலில் கால் பதித்த அவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.