
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் உள்ள குல தெய்வம் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்றைய தினம் நடைபெற்று வாக்கெண்ணிக்கை இடம்பெறுகிறது. இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள்.
ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் (55) போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸின் தாய் சாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான தமிழ்நாடு மன்னார் குடியில் உள்ள துளசேந்திரபுரத்தில் குல தெய்வமான அய்யனார் கோவிலில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
உள்ளுர் அரசியல்வாதியொருவர் அபிசேகம் செய்ததுடன் சுமார் 20 பேர் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
ஊர்க்காரர்களும், உறவினர்களும் இந்த பூஜையில் பங்கேற்றனர். முன்னதாக கமலாவை வாழ்த்தி அந்த ஊரில், கட்அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக 150 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதுடில்லியில் டிரம்பின் வெற்றிக்காக சிவசேனையை சேர்ந்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.