January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிலவைத் தொட்டது இந்தியா!

Twitter -ISRO (Grapics image)

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘விக்ரம் லேண்டர்’ சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

இதன்மூலம் சந்திரனின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த ஜுலை 14ம் திகதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

615 கோடி இந்திய ரூபா செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு சந்திரனின் வட்ட பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள் அதனை கொண்டாடியதுடன், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாராட்டினார்.

‘விக்ரம் லேண்டர்’ கருவி சந்திரனில் தரையிறங்கும் காட்சி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.