நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுத்து, அவரது வீட்டுக்கு ரசிகர்கள் அஞ்சல் அட்டைகள் அனுப்பி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக 2017 டிசம்பர் 31ஆம் திகதி அறிவித்து, ரஜினி மக்கள் மன்றத்தைத் தொடங்கினார்.
அவர் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ரஜனிகாந்த அது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளியிடவில்லை.
இந்த நிலையில், ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கையொன்றில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், கொரோனா காலத்தில் அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகச் கூறப்பட்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினிகாந்த், அந்த மருத்துவக் காரணங்களை ஒப்புக்கொண்டார். அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தார்.
இதன்மூலம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்ட நிலையில், நாள்தோறும் போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்கு முன்பு குவியும் ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.
அத்துடன் நில்லாமல், ஓட்டு போட்டா ரஜினிக்குத்தான் என்ற ஹெஷ் டேக்கையும் டுவிட்டரில் டிரெண்டிங் செய்தனர்.
அதுமட்டுமில்லாமல் “எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் நீங்க வாங்க ரஜினி, வா தலைவா வா, 2021 அரசியல் மாற்றம் உங்களால் தான் சாத்தியம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தியுள்ள ரசிகரகள், ரஜினிகாந்தின் எண் 18, ராகவ வீர அவென்யூ, சென்னை-600086 என்கிற போயஸ் இல்ல முகவரியைக் குறிப்பிட்டு, நூற்றுக்கணக்கான கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளனர்.
அதில், “மக்கள் மனதில் மன்னனாக வாழ்கிறார். இது ஆண்டவன் உங்களுக்கு தந்த வரம். தாங்கள் அரசியலில் ஈடுபட்டால் மக்களிடம் மாற்றம் வரும். ஆண்டவனிடம் கேளுங்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார் கடவுள்” என்று ஒரு ரசிகர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரசிகர்கள் அனுப்பிய கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அவரது வீட்டில் குவிந்து வருகிறன.